யாழில் தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்
தனியார் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று (17.12.2024) யாழ் (Jaffna) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
தனியார் கல்வி நிலைய செயற்பாடுகள்
கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், ஏற்கனவே எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், மாவட்டச் செயலகத்தில் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற மாவட்ட சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமையவும், தரம் 9 மற்றும் அதற்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது தொடர்பாகவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானமானது மாவட்டத்தின் சமூக நலனை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்பட்டதாகவும். பிள்ளைகளின் நலன்கருதி தனியார் கல்வி நிறுவனங்களின் அமைவிடங்கள், வகுப்பறைக் கட்டமைப்பு மற்றும் வசதிகள் தொடர்பிலும் நிறுவன உரிமையாளர்கள் கூடுதலான கவனம் செலுத்துமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேற்படி கலந்துரையாலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1.தரம் 9 மற்றும் தரம் 9 இற்கு உட்பட்ட வகுப்புக்களுக்கான தனியார் கல்வி செயற்பாடுகள் மற்றும் குழு வகுப்புக்களை வெள்ளிக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளிலும் ஞாயிற்றுக்கிழமை முழு நேரமாகவும் நிறுத்துவது எனவும். பிரதேச செயலாளர்கள் தமது உத்தியோகத்தர்கள் ஊடாக மேற்படி விடயத்தினை கண்காணித்து அறிக்கையிடுதல் வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
2.தனியார் கல்வி நிலைய வாசலில் பெற்றோர்கள் காத்திருப்பதனால் பாரிய போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் / நிர்வாகிகள் இதற்கான சரியான பொறிமுறையினை மேற்கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், இந்த பொறிமுறையினை தாமாக நடைமுறைப்படுத்த தவறும் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் பொலிஸாரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
3.பிரதேச செயலாளர்கள் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதிக்குள் தமது பிரதேசங்களில் இயங்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் குழு வகுப்புக்களை தொடர்பில் அனைவருடனும் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், யாழ். மாவட்ட தனியார் கல்வி நிலைய உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri