கடனுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை
இலங்கை எந்த தரப்பினரிடம் இருந்து கடனுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை எனவும் பணத்தை கொடுத்து மாத்திரமே எரிபொருளை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கையில் இருக்கும் பணத்தை கொடுத்தே எரிபொருளை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.
ஜூன் மாதம் 500 மில்லியன் டொலர் தேவை
ஜூன் மாதத்திற்கு மாத்திரம் சுமார் 500 மில்லியன் டொலர்கள் தேவை என நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். இலங்கை ரூபாவின் பெறுமதியில் இந்த தொகை 203 பில்லியன் ரூபாய்.
ரஷ்யாவிடம் இருந்து ஏன் குறைந்த விலைக்கு எரிபொருளை கொள்வனவு செய்யவில்லை என நாடாளுமன்றத்திற்கு கேள்வி எழுப்புகின்றனர். அனைத்து யோசனைகள், எம்மால் முடிந்த நிபந்தனைகள் என்ன என்பதை அனைத்து நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளோம்.
இதனடிப்படையில், தகுதியான விநியோகஸ்தர்களுடன் உடன்படிக்கை செய்து, விநியோகத்தை தொடர்ந்தும் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் எனவும் காஞ்சன விஜேசேகர கூறியுள்ளார்.