சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதம்: ஆளும் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான மூன்று நாள் விவாதத்துக்கான செலவீனத்தை கோரும் தீர்மானத்தை கொண்டு வர ஆளும் தரப்பினரால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த நாடாளுமன்ற அமர்வின் போது இந்த தீர்மானத்தை கொண்டு வருவதற்கு உத்தேசித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான மூன்று நாள் விவாதத்துக்காக பெரும் தொகை வீணடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிதியை எதிர்க்கட்சிகளிடம் இருந்து பெற திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவாதம் நீடிப்பு
சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை பயனற்ற செயலாகும் என கூறியுள்ளதோடு விவாதத்தின் பின்னர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட சபாநாயகர், மூன்று நாள் விவாதத்திற்கு சபைக்கு 45 மில்லியன் ரூபா செலவானதாக அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன, “கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது அரசாங்கமே. விவாதம் இரண்டு நாட்கள் என்று முடிவெடுக்கப்பட்ட போது அதனை மூன்று நாட்களுக்கு நீடிக்க வேண்டும் என்று கோரியதும் அரசாங்மே.
அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாட்டில் இருப்பதால் சபாநாயகரைப் பாதுகாப்பதற்காக வாக்கெடுப்புக்கு அவர்களைத் திரும்பப் பெற விரும்பியதன் காரணமாகவே விவாதம் மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |