தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச சபையின் இலங்கை தமிழரசு கட்சியின் உறுப்பினராகவும், இலங்கை தமிழரசு கட்சியின் கரைதுறைப்பற்று தொகுதி கிளையின் உபசெயலாளரக இருக்கும் சின்னராசா லோகேஸ்வரன் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் நேற்று (17.01.2023) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவரால் இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் பொலிஸில் முறையிட்டுள்ளார்.
முறைப்பாட்டாளரின் தகவலுக்கு அமைய தனக்கு அச்சுறுத்தல் விடுக்கும் குறித்த அரச உத்தியோகத்தரால் எதிர்காலத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் இளம் செயற்பாட்டாளர்களுக்கும் ஏனைய செயற்பட்டிற்கும் அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
குறித்த நபர் தனது இல்லத்திற்கு முன்னால் வந்து ஆபாச வார்த்தைகளால் பேசியுள்ளதுடன் கொலை செய்யப் போவதாகவும் எச்சரித்துள்ளதாக சின்னராசா லோகேஸ்வரன் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பில் அரச உயர் அதிகாரிகள்
கவனத்தில் எடுத்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் சட்டம் சரியான கடமையினை
செய்யவேண்டும் என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

