பல முக்கிய வழக்குகளை விசாரணை செய்யும் நீதவானுக்கு கொலை மிரட்டல்
இலங்கையில் மிகவும் பேசப்படும் பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரணை செய்யும் கொழும்பு கோட்டே நீதவான் பசான் அமரசேனவுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மிரட்டல் விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கடிதம் ஒன்றின் மூலம் கடுமையான அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நீதவான் தெரிவித்துள்ளார்.

தனக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் அடங்கிய கடிதம் கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு கிடைத்தமையையடுத்து, அது குறித்து நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளார்.
அதனடிப்படையில், பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று நேற்று கோட்டே நீதவானிடம் நீண்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் ஜனாதிபதியின் செயலாளருக்கும் தெளிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து, கோட்டே நீதவான் பசான் அமரசேனவின் பாதுகாப்பை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பலப்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மேலும், தனக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தல் தொடர்பில் நீதவான் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பிய கடிதம் 'யூடியூப் தளமொன்றில் வெளியானது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அக்கடிதத்தை இணையத்தில் வெளியிட்டமை தொடர்பிலும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த தகவலை வெளியிட்ட யூடியூப் தளத்தின் அதிகாரிகளிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.