மைத்திரிக்கு நெருக்கமானவரால் ஏழு தடவை மறைக்கப்பட்ட இரகசிய உளவுத்துறை தகவல்..! ஹேமசிறியின் உருக்கமான வாக்குமூலம்
2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாகக் கிடைத்த உளவுத்துறை எச்சரிக்கைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை மற்றும் அலட்சியமாகச் செயற்பட்டமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதன்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது வாக்குமூலத்தில் முன்வைத்ததாக கூறப்படும் கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன்பின்னர் மரண தண்டனை விதிப்பதற்கு முன் பிரதிவாதிக்கு ஏதேனும் கூற உள்ளதா என நீதிமன்றம் வினவிய நிலையில், அதற்கு பதிலளித்த ஹேமசிறி பெர்னாண்டோ பல தகவல்களை வாக்குமூலமாக வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட கருத்துக்களாவது,
ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் நடந்த அதிரடி திருப்பம்! பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி தொடர்பில் வெளியான தகவல்
வாக்குமூலத்தில் வெளியிட்ட தகவல்
"தலைமை நீதிபதி முன்வைத்த கருத்துக்களை நான் ஏற்கவில்லை. கனம்பொருந்திய நீதிபதி அவர்களே.. பாதுகாப்புச்செயலாளர் என்று ஒரு பதவி இல்லை. நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகவே பணியாற்றினேன். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்பது மற்ற அமைச்சுகளின் செயலாளர்களைப் போன்றதே. சிறப்பு அதிகாரங்கள் எதுவும் இல்லை.

அமைச்சரின் அறிவறுத்தலின் படியே நான் செயல்பட்டேன். அப்போதைய பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடு சென்றிருந்தார். பதில் அமைச்சராக எவரையும் அவர் நியமிக்கவில்லை. அமைச்சர் இல்லாத போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் செயல்பாடுகள் முடங்கிவிடும்.
நிலந்த ஜயவர்தன ஜனாதிபதியுடன் நெருக்கமாகச் செயல்பட்டார். நான் நியமிக்கப்பட்டதும் புலனாய்வு தகவல்கள் குறித்து எவ்வாறு செயல்படுவது என்று ஜனாதிபதியிடம் கேட்டேன். அதற்கு ஜனாதிபதி, 'புலனாய்வு தகவல்களை நிலந்த எனக்குத் தெரிவிப்பார், நீங்கள் நிர்வாக வேலைகளைக் கவனியுங்கள்' என்றார்.
நான் அமைச்சின் நிர்வாகக் கடமைகளை மட்டுமே செய்தேன். நான்கு ஆண்டுகளில் புலனாய்வு தகவல்களை ஜனாதிபதியிடம் நிலந்தவே வழங்கி வந்தார். தாக்குதலுக்கு முந்தைய நாள் நிலந்தவிடமிருந்து எந்த ஆவணமும் எனக்கு வரவில்லை. இரண்டு வாட்ஸ்அப் செய்திகள் மட்டுமே வந்தன.
ஏப்ரல் 9 ஆம் திகதி நடந்த புலனாய்வு ஆய்வுக் கூட்டத்தில் நிலந்த இந்தத் தாக்குதல் பற்றி எதையும் கூறவில்லை. கூறியிருந்தால் அங்கிருந்த இராணுவ, கடற்படை புலனாய்வு பிரதானிகளுக்கும் தெரிந்திருக்கும்.எங்கள் குழுக்களில் ஒன்று கிழக்குப் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தும் என்றும் அவர் எங்களுக்குத் தெரிவித்தார்.
ஏழு தடவை மறைக்கப்பட்ட தகவல்
இந்தத் தகவல் கிடைத்த ஏப்ரல் 1 முதல் 16 வரையிலான காலகட்டத்தில் ஜனாதிபதி இலங்கையில் இருந்தார். ஆனால், நிலந்த ஜயவர்தன இந்தத் தகவலை ஜனாதிபதிக்குத் தெரிவித்திருக்கலாம். அவர் அதை வேண்டுமென்றே மறைத்தார். இந்தத் தகவலை அவர் ஏழு முறை மறைக்க முயன்றார்.
அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளரே இப்படிச் செயல்பட்டால், அதற்கு நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? தாக்குதலுக்கு முந்தைய நாள் மாலையில், நிலந்த ஜயவர்தன என்னை அழைத்து, நடத்தப்படவிருந்த தாக்குதல்கள் குறித்து எனக்கு தெரிவித்தார். இதை நம்ப முடியுமா என கேட்டேன். இதுகுறித்து விசாரித்து அறிக்கை அளிப்போம் என்று அவர் கூறினார்.
நிலந்த ஜயவர்தனவின் கீழ் நாடு முழுவதும் சுமார் 1500 புலனாய்வு அதிகாரிகள் உள்ளனர். இதை விசாரித்து உறுதிப்படுத்தும்படி அவர்களிடம் கேட்டிருக்கலாம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை.
இராணுவத்தை வரவழைக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் கூட எனக்கு இல்லை. தலைமை நீதிபதி அவர்களே, நீங்கள் என் நிலையில் இருந்திருந்தால், நீங்களும் அதையே செய்திருப்பீர்கள்.
"தாக்குதலுக்குப் பிறகு ஜனாதிபதி விஜித் மலல்கொட குழுவை நியமித்தார். அந்த குழு 14 அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியது. ஆனால் மற்றவர்களை விட்டுவிட்டு எனக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் மட்டுமே நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு ஜனாதிபதி கூறினார்.
ஏப்ரல் 22 இல் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில் நானும் பொலிஸ் மா அதிபருமே பொறுப்பு என்றும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார். அந்த முடிவின் இறுதி விளைவே இந்தத் தீர்ப்பு.
இந்த தீர்ப்பைக் கேட்டு இருவர் மகிழ்ச்சியடைவார்கள். ஒருவர் நிலந்த ஜயவர்தன, மற்றையவர் மைத்திரிபால சிறிசேன. சட்டமா அதிபர் திணைக்களம் ஆரம்பத்திலிருந்தே நிலந்த ஜயவர்தனவைப் பாதுகாத்தது. சாதாரண அறிவு கூட இல்லாத ஒருவனால் மட்டுமே இதில் மகிழ்ச்சியடைய முடியும்.
"எனக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. காயம் இன்னும் ஆறவில்லை. எனக்கு 76 வயதாகிறது. சிறையிலடைத்தாலும் தேவையான சிகிச்சைகளை வழங்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தூக்கிலிடப்படுவதற்காவது நான் உயிரோடு இருக்க வேண்டுமே. வரலாறு என்றாவது ஒரு நாள் என்னை விடுவிக்கும்" எனக் கூறி குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்பின்னர் தீர்ப்பை அறிவித்த தலைமை நீதிபதி பிரியந்த லியனகே,
"குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு பாதுகாப்பு அமைச்சுக்கு உள்ளது. இந்த பிரதிவாதி பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆவார். எனவே அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்ட 855 குற்றச்சாட்டுகளில் 854 குற்றச்சாட்டுகளுக்கு அவர் குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam