இலங்கையில் பேசுபொருளாகியுள்ள அரச அதிகாரியின் மரணம்! விசாரணையில் உறுதியான தகவல்
சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம், அவர் தானாக ஏற்படுத்திக் கொண்ட காயங்களினால் ஏற்பட்ட தற்கொலை என, விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட சட்ட மருத்துவக் குழு உறுதி செய்துள்ளது.
நிதியமைச்சுக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மோசடியாக மாற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக, பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த திறைசேரியின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்ச, நேற்று (30) தனது வீட்டுத் தோட்டத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
நிதியமைச்சின் உதவிப் பணிப்பாளரின் மரணம்
அவரது கை மற்றும் கால்களில் மூன்று வெட்டுக் காயங்கள் காணப்பட்டதால், இது தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

இந்தநிலையில், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்ததாவது, உடற்கூறு பரிசோதனைக்காக நான்கு சட்ட மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இன்று (01) பிற்பகல் நடைபெற்ற உடற்கூறு பரிசோதனையின் முடிவில், இந்த மரணம் அவர் தானாக ஏற்படுத்திக் கொண்ட காயங்களினால் ஏற்பட்ட தற்கொலை என அந்த குழு உறுதி செய்துள்ளது.
அதன்படி, இந்த மரணம் அவர் ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் ஏற்பட்டது என்பதை விசாரணைக்காக நியமிக்கப்பட்ட நான்கு சட்ட வைத்திய அதிகாரிகள் அடங்கிய குழு உறுதிப்படுத்தியுள்ளது.