கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்பு
நண்பருடன் கடற்றொழிலுக்குச் சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்டம் இறக்காமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு சாவாறு பகுதியில் நேற்று (01) இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கை
கடந்த திங்கட்கிழமை(31) மாலை நண்பருடன் மீன்பிடிக்கச் சென்ற குறித்த கடற்றொழிலாளி காணாமல்போயுள்ளார்.
இந்நிலையில் தனது கணவரைக் காணவில்லை என மனைவி நேற்று (01) காலை இறக்காமம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த முறைப்பாட்டிற்கமைய காணாமல் சென்ற கடற்றொழிலாளியின் நண்பரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது காணாமல் சென்ற கடற்றொழிலாளியின் சடலம் நண்பகல் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் சடலமாக மீட்கப்பட்டவர் கல்முனை - பாண்டிருப்பு செல்லப்பா வீதி பாண்டிருப்பு 01 ஏ பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய செல்வராசா வெற்றி வேல் ( பெரிய தம்பி) என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
அத்துடன் மீட்கப்பட்ட கடற்றொழிலாளியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
