ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் தொடர் குண்டு தாக்குதல் - பலர் உயிரிழப்பு
கிழக்கு உக்ரைனில் பிரிவினைவாதிகளால் நடத்தப்படும் நகரமான டொனெட்ஸ்கில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய ஆதரவு மேயர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு உக்ரைன் மீது அவர் குற்றம் சாட்டியுள்ளார். எனினும், இந்த தாக்குதல் தொடர்பில் உக்ரைன் தரப்பில் இருந்து கருத்துகள் எதுவும் வெளியிடப்படவில்லை.
டொனெட்ஸ்க் ரஷ்யாவின் அதிகாரிகளால் 2014 முதல் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், உக்ரேனியப் படைகள் நகரை குறிவைத்ததாக அவர்கள் பலமுறை குற்றம் சாட்டியுள்ளனர்.
உக்ரைன் மீது உள்ளூர் அதிகாரிகள் குற்றச் சாட்டு
நகரின் மேற்கில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து டொனெட்ஸ்கில் உள்ள குய்பிஷெவ்ஸ்கி மாவட்டத்தில் ஒன்பது 150 மிமீ குண்டுகள் வீசப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேருந்து நிறுத்தம், கடை மற்றும் வங்கிகளில் பொதுமக்களை வேண்டுமென்றே குறிவைத்ததாக உக்ரைன் மீது உள்ளூர் அதிகாரிகள் குற்றம் சாட்டினார்.
பிப்ரவரியில் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து தெற்கே உள்ள டொனெட்ஸ்க் பகுதிகளை ரஷ்யப் படைகள் கைப்பற்றியிருந்தாலும், நகரின் புறநகரில் இருந்தே உக்ரேனிய இராணுவத்தை பின்னுக்குத் தள்ள போராடி வருகின்றனர்.
உக்ரேனியப் படைகள் தெற்கிலும் வடகிழக்கிலும் எதிர்த்தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன, மேலும் அவர்களின் மிக வியத்தகு முன்னேற்றம் இந்த மாதம் வடக்கு கார்கிவ் பகுதியில் கண்டுள்ளனர்.