இலங்கைக்கு சர்வதேச அவமானத்தை ஏற்படுத்திய அரச அதிகாரியின் செயல்
இலங்கையில் ஆட்சியைப் பொறுத்தவரை சில அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை மீறுவது மிகவும் பொதுவான பிரச்சினையாக உள்ளது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், அண்மைய நாட்களில் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை மீறும் மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளதுடன், இது இலங்கைக்கு சர்வதேச அவமானத்தை ஏற்படுத்திய ஒன்றாகவும் அமைந்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நாட்டின் முயற்சிகளில் ஒன்றாக, முன்னாள் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் கொழும்பு துறைமுக நகரத்தை மேம்படுத்த முன்வந்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர முதலீடு
இந்த வாரம் எமிரேட்ஸில் அபுதாபி மற்றும் துபாயில் இடம்பெறும் நிகழ்வுகளின் போது கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடுகளை ஊக்குவிக்க கேமரூன் திட்டமிட்டிருந்தார்.
இதில் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கலந்துகொள்வார்கள் என கூறப்பட்டிருந்தது. இந்த ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், துபாயில் நடைபெறவுள்ள நிகழ்ச்சி தொடர்பான அழைப்பாளர் ஒருவருக்கு ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ஒருவர் நேரடியாக கடிதம் எழுதியுள்ளார்.
''தனது சொந்த ஒருங்கிணைப்புச் செயலாளரைத் தொடர்பு கொண்டு, நிகழ்வில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்துங்கள்'' என கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் கடிதத் தலைப்பின் கீழ் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடுமையான அறிவுறுத்தல்
இவ்வாறானதொரு சூழ்நிலையில்தான் அண்மையில் ஜனாதிபதி செயலகம் அதன் கடிதத்தலைப்பை பயன்படுத்துவதில் கடுமையான அறிவுறுத்தல்களை வகுத்து ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
இந்தநிலையில் குறித்த ஜனாதிபதியின் மூத்த ஆலோசகரின் நடவடிக்கை குறித்து ஜனாதிபதியோ அல்லது அவரது மூத்த அதிகாரிகளோ அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.