பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற டேன் பிரியசாத் கொலையாளி
அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
டேன் பிரியசாத்தின் படுகொலைக்குக் காரணமாக துப்பாக்கிதாரி மதுபான விருந்தொன்றில் கலந்து கொண்டு கொழும்பு, குருந்துவத்தை ஊடாக பயணிக்கவிருந்த தகவல் மேல்மாகாண குற்றத் தடுப்பு பொலிசாருக்கு கிடைத்துள்ளது.
விசேட சோதனை
அதனையடுத்து அப்பிரதேசத்தில் விசேட சோதனை நடவடிக்கையொன்றை மேற்கொண்ட பொலிசார், டேன் பிரியசாத் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ஹட் பந்து என்பவர் பயணித்த காரையும் நிறுத்திச் சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது பொலிஸாருடன் வாய்த்தர்க்கம் புரிந்து பந்து, பலவந்தமாக அவ்விடத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மதுபோதையில் அவர் செலுத்திய வாகனம் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பயணித்த வாகனத்தில் மோதுண்டதை அடுத்து, குருந்துவத்தைப் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.
முறைப்பாடு
எனினும் குடிபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் அவர் மீது முறைப்பாடு பதிந்துவிட்டு பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளனர். அதன் பிரகாரம் இரண்டாவது தடவையாகவும் அவர் பொலிசாரிடம் இருந்து தப்பித்துக் கொண்டுள்ளார்.
அந்தச் சந்தர்ப்பத்தில் அவ்விடத்துக்கு வருகை தந்த மிரிஹானை குற்றத் தடுப்புப் பிரிவினரே ஹட்பந்துவை இனம் கண்டு, டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பில் அவரைக் கைது செய்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.