ஸ்டொக்கம் தோட்டத்தில் 2 வீடுகள் சேதம் - 12 பேர் பாதிப்பு
மலைநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டம் தொழிற்சாலை பிரிவில் 13ம் இலக்கம் கொண்ட நெடுங்குடியிருப்பில் சுவர் உடைந்து வீழ்ந்துள்ளது.
20 வீடுகளைக் கொண்ட தொடர் வீடுகளில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இதில் இரண்டு வீடுகள் முழுமையாகச் சேதமாகியுள்ளது.இந்த சம்பவத்தில் இரண்டு வீடுகளைச் சேர்ந்த 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் வீடுகளின் கூரைகள் சேதமாகியுள்ளதுடன், வீடுகளின் தளபாடங்கள் மற்றும் பொருட்களும் சேதமாகியுள்ளது.
இந்நிலையில்,பாதிக்கப்பட்டவர்களைத் தோட்ட நிர்வாகத்தின் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் இப்பகுதி கிராம சேவகர் ஊடாக நோர்வூட் பொலிஸார் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களைத் தோட்ட ஆலய மண்டபத்தில் பாதுகாப்பு கருதித் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுக்கான நிவாரண உதவிகளை மஸ்கெலியா பிரதேச சபையின் ஊடாக மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த நெடுங்குடியிருப்பில் உள்ள ஏனைய 5 வீடுகளிலும் வெடிப்புகள் காணப்படுவதன் காரணமாக இடிந்து விழும் அபாயம் இருப்பதாகக் குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
எனவே, உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குடியிருப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



