இத்தாலியில் நீர் மின் நிலைய அணையில் வெடி விபத்து
இத்தாலியின்(Italy) மத்திய பகுதியில் உள்ள நீர் மின் நிலைய அணையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும், நான்கு பேரைக் காணவில்லை எனவும், மூன்று பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க தீயணைப்புப் படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டடுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
தேடும் பணி தீவிரம்
தொடர்ந்தும் காணாமல் போனவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இத்தாலியின் போலோக்னா மற்றும் புளோரன்ஸ் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள சுவியானா ஏரியின் அணையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த அணை அந்நாட்டின் எரிசக்தி நிறுவனமொன்றினால் நிர்வகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தீ விபத்து
அதிகாலையில் அதன் மின்மாற்றி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசையாழிகள்(Turbine) வேலை செய்யும் போது பூமிக்கு அடியில் ஒன்பது அடி ஆழத்தில் வெடிப்பு நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அணையின் பள்ளத்தாக்கு சேதமடையவில்லை என்றும், சம்பவத்தின் போது ஆலையின் செயற்பாடு நிறுத்தப்பட்டு இருந்ததால் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அணை இயக்குனர்கள் கூறியுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |