சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல் - மூன்று ஜனாதிபதிகள் ஒன்றிணையும் புதிய கூட்டணி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் சந்திரிகா குமாரதுங்க தலைமையில் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டணி தொடர்பில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தென்னிலங்கை அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சிகளின் ஆதரவு

இதன் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசிய கட்சியை மேலும் விரிவுபடுத்தும் நோக்கிலேயே இந்த திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய கூட்டணியில் இணைவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெருந்தோட்ட அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் சில பகுதிகள் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.
புதிய கூட்டணி

உருவாக்கப்படும் பரந்துபட்ட கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஆதரவைப் பெறுவதற்கான நடவடிக்கைளை ரணிலுக்கு நெருக்கமான தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுஜன பெரமுன - ஐக்கிய தேசிய கட்சியை மேலும் விஸ்தரிக்கப்பட்டதன் பின்னர் உருவாகும் இந்த புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் தேர்தலில் களமிறங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
ராஜபக்ச குடும்பம் மீது சந்திரிக்கா கடும் அதிருப்தி கொண்டுள்ளார். எனினும் ரணிலின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.
ரணிலின் திட்டம்

மறுபுறத்தில் ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்தும் தீவிர நடவடிக்கையில் அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்க மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.
அடுத்து நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றுவது அவரின் நோக்கமாக உள்ளதாக சிறிகொத்தா தகவல்கள் தெரிவிக்கின்றன.