இலங்கைக்கான கியூபா தூதுவர்- மாநகர முதல்வர் மதிவதனி இடையே சந்திப்பு
யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் வி.மதிவதனிக்கும் கியூபா நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மதிப்பிற்குரிய பெட்ரிசியா லாசாரா பெகோ குவேரா ஆகியோருக்கிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பில் கியூபா நாட்டின் வரலாற்றுச் சுருக்கம், தற்போதைய நிலமைகள், பொருளாதார பிரச்சினைகள், கல்வி, தொழில் முயற்சிகள் உள்ளிட்டவற்றின் நிலமைகள் தொடர்பில் கியூபா தூதுவர் அவர்கள் மாநகர முதல்வருக்கு எடுத்துக் கூறினார்.
கியூபா நாட்டின் புலமைப்பரிசிலில் மூன்று இலங்கை மாணவர்கள் கியூபா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் கற்று வருவதனையும் கூறி மகிழ்ந்தார்.
பொருளாதாரப் பிரச்சினை
முதலாவது விஜயத்தை வடக்கிற்கு மேற்கொண்டுள்ள தூதுவரை மாநகர முதல்வர் வரவேற்றுக் கொண்டதுடன், இலங்கை மாணவர்களுக்கான கியூபா நாட்டின் சந்தர்ப்பங்களுக்கு நன்றி கூறினார்.
அத்துடன், கியூபா நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு கவலை தெரிவித்ததுடன், விரைவில் கியூபா பொருளாதார ரீதியாக எழுச்சியடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்ததுடன், இரு நாட்டு மக்களுக்கிடையே உறவை கட்டியெழுப்புவது தொடர்பாகவும் பேசப்பட்டது.

மேலும் போர்க்காலங்களில் தமிழ் மக்கள் எதிர்கொண்ட இன்னல்கள், எமது மக்களின் தற்போதைய நிலமைகள், பொருளாதார முன்னேற்றங்களின் மந்த நிலமைகள், உரிமை சார்ந்து தொடரும் போராட்டங்கள் மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பிலும் தெளிவுபடுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ந்து உறவைப் பேணி, ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்பது என்று கலந்துரையாடப்பட்டது.
சுற்றுலாத்துறை முக்கியத்துவம்
இலங்கைக்கான கியூபா தூதுவர் பட்ரீசியா லசாரா பெகோ குவேரா நேற்றைய தினம் (15) யாழ்ப்பாணத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணக் கோட்டைக்கு விஜயம் செய்து, அதன் வரலாற்றுப் பின்னணி, கட்டடக்கலைச் சிறப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை முக்கியத்துவம் தொடர்பில் பார்வையிட்டார்.
இவ்விஜயத்தின்போது, யாழ்ப்பாணக் கோட்டையின் வரலாற்று மரபுகள், அதன் தொல்லியல் முக்கியத்துவம் மற்றும் வடமாகாணத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சியில் அது வகிக்கும் பங்கு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

போர்த்துக்கேயர்களால் ஆரம்பத்தில் நிர்மாணிக்கப்பட்டு, பின்னர் ஒல்லாந்தர்களால் விரிவுபடுத்தப்பட்ட யாழ்ப்பாணக் கோட்டை, வடமாகாணத்தின் முக்கியமான வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
இக்கோட்டை யாழ்ப்பாணத்தின் வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபுகளை வெளிப்படுத்தும் முக்கியமான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.