கடற்றொழில் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசின் புதிய முயற்சி : சபையில் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலடி
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் கடற்றொழில் அமைச்சுக்கு 24,024.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், இது அண்மைக்கால வரலாற்றில் கடற்றொழில் துறைக்காக ஒதுக்கப்பட்ட அதிகூடிய நிதியாகும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் கீழ், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தொடர்பான விவாதம் நேற்று(27.11.2026) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் உரையாற்றும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை கடற்றொழில் அமைச்சுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான மேலதிக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு 7,511 மில்லியன் ரூபாயும், 2024ஆம் ஆண்டு 10,597 மில்லியன் ரூபாயும், 2025ஆம் ஆண்டு 10,668 மில்லியன் ரூபாயும், 2026ஆம் ஆண்டு 16,635 மில்லியன் ரூபாயும் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், 2027ஆம் ஆண்டுக்காக 24,024.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலில் இரட்டிப்பான வருமான பெற..
நாட்டின் மக்களின் போஷாக்குத் தேவையைப் பூர்த்தி செய்வதிலும், குறிப்பாக புரதச்சத்து தேவையை உறுதிப்படுத்துவதிலும் கடற்றொழில் துறை முக்கிய பங்காற்றுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு கடல் மற்றும் நன்னீர் மீன்பிடித்துறைகளை ஒருங்கிணைத்து அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் ஒரு பகுதியாக, யான் ஓயா நீர்த்தேக்கத்தில் கூண்டு முறையிலான மீன் வளர்ப்புத் திட்டம் முன்னோடித் திட்டமாக முன்னெடுக்கப்படுகிறது. இதன் வெற்றியை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த ஆண்டில் நாட்டின் உள்நாட்டு நீர்த்தேக்கங்களில் 175 மீன் வளர்ப்புக் கூண்டுகளை நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் நன்னீர் மீன் உற்பத்தியை அதிகரித்து மக்களுக்கான புரத உணவு விநியோகத்தை மேம்படுத்த முடியும். அதேவேளை, நாட்டின் மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
13,600 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் கந்தர மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாத இறுதிக்குள் நிறைவுசெய்யப்பட்டு, சர்வதேச தரத்திலான முழுமையான மீன்பிடித் துறைமுகமாக மக்கள் பயன்பாட்டுக்குக் கையளிக்கப்படும்.
மேலும், வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், யாழ்ப்பாணம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் நிர்மாணப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன், காலி, அம்பலாங்கொடை, தெவுந்தர, மிரிஸ்ஸ மற்றும் கலமெட்டிய உள்ளிட்ட மீன்பிடித் துறைமுகங்களையும் நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.