நாட்டை நிர்வகிக்கத் தெரியாமல் திணறும் அநுர அரசு - இயலாமையை மறைக்க அடக்குமுறைச் சட்டங்களா..!
நாட்டின் ஊழல் மற்றும் மோசடிகளை ஒழித்து வளமான நாட்டை உருவாக்குவதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அநுர அரசுக்கு, இதற்கு முன்னர் நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களின் பணிகளில் துளியளவுகூடச் செய்வதற்குத் திறமையில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி சாகர காரியவசம் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
தமது இயலாமையை மூடிமறைப்பதோடு, வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் ஏற்படும் மக்கள் எதிர்ப்பைச் சமாளிப்பதற்காகவே அடக்குமுறைச் சட்டங்கள் ஊடாக அதிகாரத்தைத் தக்கவைக்க அரசு தீவிரமாக முயற்சித்து வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதான தலைமையகத்தில் நேற்று(09.11.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் நியமனங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர் நீதிமன்றங்கள் மற்றும் மேல் நீதிமன்றங்களில் நீதிபதி பதவிகளுக்கான பல பிரதான வெற்றிடங்கள் காணப்பட்ட போதிலும், அவற்றுக்கு உரிய காலப்பகுதியில் நியமனங்கள் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.
கீழ் நீதிமன்ற நீதிபதிகளுக்கு அரசுக்குத் தேவையான முறையிலும் சாதகமான படியும் தீர்ப்புகளை வழங்குமாறு தற்போதைய ஆட்சியாளர்கள் மறைமுக அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர்.

கம்பஹா மற்றும் கல்கிஸை நீதிவான்களின் திடீர் இடமாற்றங்கள் என்பன அரசின் இத்தகைய தலையீடுகளுக்குச் சிறந்த மற்றும் நேரடியான உதாரணங்களாகும்.
இதன்மூலம் நீதித்துறையின் சுயாதீனம் முற்றாகக் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் விவகாரம் மற்றும் அனுராதபுரத்தில் மகா சங்கத்தினர் மீது மேற்கொள்ளப்பட்ட அநாகரிகமான அடக்குமுறைத் தாக்குதல்கள் மூலம் இந்த அரசு பௌத்த சாசனத்துக்குப் பெரும் துரோகத்தை இழைத்து வருகின்றது.
அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள இரு சட்டமூலங்கள்
பௌத்த பிக்குகளுக்கு இடையே பிளவுகளை உருவாக்கும் இத்தகைய அநீதியான செயற்பாடுகளுக்கு நாட்டின் ஜனாதிபதியே முழுமையான பொறுப்புக்கூற வேண்டும்.

தற்போதைய அரசு கொண்டுவரத் துடிக்கும் 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்' மற்றும் 'ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டம்' போன்ற கடுமையான அடக்குமுறைச் சட்டங்களை ஐக்கிய நாடுகள் சபை, உள்நாட்டுப் புத்திஜீவிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்கள் அனைவரும் கடுமையாக எதிர்க்கின்றனர்.
மக்கள் மத்தியில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதாலேயே, இத்தகைய அடக்குமுறைகள் மூலம் ஆட்சியைத் தொடர்ந்து தக்கவைக்க அரசு முயற்சி செய்கின்றது.
ஆனால், பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அரசின் இத்தகைய அடக்குமுறை முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றார்.