16 வருடங்களாக போராடும் தமிழர்களுக்கு தீர்வு வேண்டும்..! ஈரோஸ் கட்சியின் தலைவர்
ஈரோஸ் அமைப்பின் தலைவர் பாலகுமார் 2500 தோழர்களுடன் சென்று தமிழ் மக்களுக்காக விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் இணைந்து செயற்பட்டாரே அவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் ரீதியான செயற்பாட்டுக்காக புனர்வாழ்வு அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா இணைந்து செயற்படவுள்ளதாக ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் நேற்று(17.09.2026) தமிழீழ விடுதலைப் புலிகள் கட்சி தலைவர் க. இன்பராசா ஈரோஸ் கட்சியின் தலைவர் இரா. பிரபாகரன் இணைந்து நடத்திய ஊடக மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
16 வருடங்களாக போராடும் மக்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேசிய தலைவர் பிரபாகரனால் ஒரு ஆயுத சக்தி மௌனிக்கப்பட வேண்டும், ஒரு அரசியல் சக்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனித்த பின்னர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் பேசும் மக்களின் மாபெரும் சக்தி என்ற எண்ணப்பாட்டில் தமிழ் மக்கள் மாத்திரமல்ல, சர்வதேச நாடுகளும் கூட அவதானித்துக் கொண்டிருந்தன.
இந்த நிலையில், அரசியல் தீர்வு தைப்பொங்கலுக்கு வரும், தீபாவளிக்கு வரும் என காலங்காலமாக தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்டு, உச்சகட்ட விளிம்பில் இருந்து கொண்டிருக்கின்றனர்.
ஈரோஸ் பார்வையாளர்களாக இருந்தோம். ஏன் என்றால், தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

இன்று 16 வருடங்கள் கடந்தும் எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. மக்கள் வறுமையினால் பிச்சை எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இனி மக்களின் துன்பங்களையும் கஷ்டங்களையும் பார்த்துக்கொண்டிருக்க முடியாது.
அதன் காரணமாக, ஈரோஸ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் களம் இறங்க வேண்டிய காலத்தின் கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளோம்.
அதன் காரணமாக, புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள் மற்றும் முன்னாள் போராளிகள், விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், புனர்வாழ்வு அழிக்கப்பட்ட போராளிகள் என அனைவரையும் தொடர்புகொண்டு, இணைந்து செயற்படப் போவதாக தெரிவித்துள்ளார்.