பிரித்தானிய பிரதமருக்கு நெருக்கடி: தூதுவர் நியமனத்தில் ஏற்பட்ட சிக்கல்
அமெரிக்காவிற்கான பிரித்தானிய தூதுவராக லார்ட் மண்டேல்சன் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், பிரதமர் கீர் ஸ்டார்மர் நாடாளுமன்றத்தை வேண்டுமென்றே தவறாக வழிநடத்தினாரா என்பது குறித்து புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடனான நட்புக்காக மண்டேல்சன் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது நியமனத்தின் போது பாதுகாப்பு சோதனைகள் முறையாக நடைபெற்றதா என்பதில் பிரதமர் உண்மையை மறைப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
"முழுமையான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன" என்று பிரதமர் கூறியிருந்த நிலையில், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக எழுந்துள்ள முறைப்பாடுகள் அவருக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன.
அரசியல் நாடகம்
இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்துள்ள ஆளும் தொழிற்கட்சியினர், இது வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டு எதிர்க்கட்சிகள் நடத்தும் ஒரு அரசியல் நாடகம் என்று விமர்சித்துள்ளனர்.

ஏற்கனவே இது குறித்து ஒரு குழு விசாரித்து வரும் நிலையில், மற்றொரு குழு விசாரணை நடத்துவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்பது ஆளும் தரப்பின் வாதமாக உள்ளது. எவ்வாறாயினும், நாடாளுமன்ற உரிமைக் குழு இந்த விசாரணையைத் தொடங்குவது குறித்து நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட வாய்ப்புள்ளது.
கடந்த காலங்களில் இதே போன்ற விசாரணைகள் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் போன்றவர்களின் அரசியல் வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது பிரதமர் கீர் ஸ்டார்மர் அத்தகைய ஒரு இக்கட்டான சூழலை எதிர்கொண்டுள்ளார்.
ஒருவேளை பிரதமர் நாடாளுமன்றத்தில் பொய் சொன்னது நிரூபிக்கப்பட்டால், அவர் தனது பதவி விலக வேண்டும் கட்டாயம் ஏற்படும் என்பதால், இந்த விவகாரம் பிரித்தானிய அரசியலில் உச்சக்கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன்னால் பதற்றம்! குவிக்கப்பட்ட பொலிஸார் - சாணத்தால் தாக்கி விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள்