கொழும்பில் கொண்டாட்ட நிகழ்வின் போது பயங்கரம் - மூன்று பேர் அதிரடியாக கைது
கொழும்பின் புறநகர் பகுதியில் கொண்டாட்ட நிகழ்வில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 23ஆம் திகதி வத்தளை, கதிறான பல்லியவத்தை பிரதேசத்தில் உள்ள மண்டபம் ஒன்றில் இரவு நேரத்தில் நடைபெற்ற பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
காரில் வந்த குழுவினர் துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் கைது
மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து நேற்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 26, 35 மற்றும் 36 வயதுடைய ஜிந்துபிட்டிய, மாத்தளை மற்றும் கடுகன்னாவை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் காரை ஓட்டிய வாகன ஓட்டுநராகும். மற்றொரு சந்தேகநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எனவும், மற்றைய சந்தேகநபர் குற்றவாளிகளுக்குத் தலைமறைவாக இருக்க உதவியவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.