ஓரினச்சேர்க்கை நபர்களை குற்றமாக கருதும் சட்டங்களை நீக்க வேண்டும்- ஐ.நா.சபை
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் குழு இலங்கை அரசாங்கத்திடம் ஓரினச்சேர்க்கை நபர்களை குற்றமாக கருதும் சட்டங்களை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை தொடர்பான அதன் 5 ஆவது மற்றும் 6ஆவது கால அறிக்கையின் 16 ஆவது பந்தியில் ஓரினச்சேர்க்கை மக்களுக்கு எதிரான பாகுபாட்டையும் துன்புறுத்தலையும் நிறுத்தி, அவர்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபடுபவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பரிந்துரைகளை ஏற்றுக்கொண்ட இலங்கை
இலங்கை அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டதுடன், "சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு இணங்க அவற்றைக் கொண்டுவருவதற்காக" தண்டனைச் சட்டச் சீர்திருத்தங்களுக்கு உறுதியளித்துள்ளதாகவும் அதன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குற்றவியல் சட்டத்தின் தற்போதுள்ள பிரிவு 365 மற்றும் 365A இன் கீழ், சிறுவர்கள் "குற்றவாளிகளாகக் கருதப்படுகிறார்கள்" என்பதையும் அந்தக் குழு சுட்டிக்காட்டிய போது “சட்டம் காலனித்துவ காலத்திலிருந்து மரபுரிமையாகப் பெறப்பட்டது என்றும், தற்போதைய அரச நடைமுறையின் கீழ், சிறுவர்கள் குற்றவாளிகளாகக் கருதப்படுவதில்லை" என்றும் இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது.
பொய்யான வதந்திகள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதி அமைப்பாளர் ஷர்மிளா கோனவல தலைமையிலான நகர்ப்புற குடிமக்கள் போன்ற அமைப்புகளால் முன்மொழியப்பட்ட குற்றவியல் (திருத்தம்) சட்டமூலம் பிரிவு 365 ஐ திருத்துவது மற்றும் பிரிவு 365A ஐ ரத்து செய்வது, சிறுவர்களுக்கு தீங்கு விளைவிப்பதுடன், சிறுவர்களுக்கான இலங்கையின் ஐ.நாவுக்கான வாக்குறுதிகளை மீறப்படுகிறது என்று பரப்பப்படுகின்ற பொய்யான வதந்திகளை ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் குழுவின் வலுவான அறிக்கை நேரடியாக சவால் செய்கிறது.
100க்கும் மேற்பட்ட சிறுவர் உரிமைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும் சட்டத்தரணிகள் சிறுவர் பாதுகாப்புப் படை மற்றும் சிறுவர் வன்கொடுமை தடுப்பு அறக்கட்டளை மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் ஆகியோர் தண்டனை (திருத்தம்) சட்டமூலத்துக்கு ஆதரவாக சமீபத்தில் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தச் சட்டத்தை இயற்றினால் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாக நேரிடும் என்று பரப்பப்படும் "பொய்களை" நம்ப வேண்டாம் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.