அருட்தந்தை சிறில் காமினி உட்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத்துறையில் முறைப்பாடு
உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிராக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருவதாகக் கூறி, அருட்தந்தை சிறில் காமினி (Cyril Gamini) உட்பட்டவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத்துறையில் அரசப் புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஸ் சாலி (Suresh sally) முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 23ஆம் திகதியன்று ஸூம் தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான குழு விவாதத்தில் கலந்துகொண்ட அருட்தந்தை சிறில் காமினி, பயங்கரவாதத் தாக்குதலுக்குத் தலைமை தாங்கிய தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவர் சஹரான் ஹாஷிம் (Saharan Hashim), அரச புலனாய்வுத்துறையிடம் இருந்து பணம் பெற்றதாக தொிவித்திருந்தார்.
முன்னர் பிரிகேடியராக இருந்த காலத்தில் மேஜர் ஜெனரல் சாலி, சஹரானையும் அவரது ஆதரவாளர்களையும் வளர்ப்பதில் தீவிர பங்கு வகித்ததாக அவர் தொிவித்திருந்தார்.
எனினும் காமினி மற்றும் பலர் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுக்களையும் முற்றிலும் மறுத்துள்ள, மேஜர் ஜெனரல் சலே, அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானவை என்றும் அவை தன்னை அவதூறு செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளின் மூலம்,பொது மக்களை தவறாக வழிநடத்துவது மட்டுமல்ல, தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் தனது நற்பெயருக்கு வேண்டுமென்றே சேதம் விளைவிப்பதும், தனது உயிருக்கும், தனது குடும்ப உறுப்பினர்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதும் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் உளவுத்துறை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் பொய்யான குற்றச்சாட்டுகள், பாரியப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இந்த நிலையில் சஹாரான் ஹாஷிம் அல்லது அவரது ஆதரவாளர்களுடன் எந்த சூழ்நிலையிலும் தாம் தொடர்பும் கொண்டதில்லை என்று சாலி தமது முறைப்பாட்டில் தொிவித்துள்ளார்.
எனவே, குழு விவாதத்தில் கலந்துகொண்ட அருட்தந்தை சிறில் காமினி மற்றும் ஏனையோருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் மேஜா் ஜெனரல் சாலி கோாிக்கை விடுத்துள்ளார்.
