பிள்ளையான் தொடர்பில் புதிய குற்றச்சாட்டு..! அட்டூழியங்களை போட்டுடைத்த கருணாநிதி
பிள்ளையான் போன்று பல இயக்கங்களை வழிநடத்தியவர்கள் வெளியில் சுதந்திரமாக இருக்கிறார்கள், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்றும், ஹிருணிகா எதிர்க்கட்சி தலைவராக வந்தால் பதிலடி கொடுப்பார் என்றும் புதிய தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய “நேருக்கு நேர்” நேர்காணல் நிகழ்ச்சியில், பிள்ளையான் தொடர்பிலும் சஜித் பிரேமதாச தொடர்பிலும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிள்ளையானுக்கு இராணுவம் உதவியதா?
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிள்ளையான் மட்டும் கிழக்கு மாகாணத்தில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடவில்லை. மாறாக, அவருடன் இணைந்து செயல்பட்டவர்களும் உள்ளனர். அவர்களையும் இந்த அரசாங்கம் கைது செய்ய வேண்டும். வதை முகாம்களை அமைத்து கொடூரமான செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்போது சுதந்திரமாக இருந்து, அநுர அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.
அவர்களுக்கு உரிய தண்டனையை மக்கள் பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும், வடக்கிலிருந்து முஸ்லிம் மக்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றவில்லை. மாறாக அவர்களின் பாதுகாப்பிற்காகவே வழியனுப்பி வைத்தார்கள்.
அத்துடன், சஜித் பிரேமதாச எதிர்க்கட்சி தலைவராக இருப்பதற்கு பொருத்தமற்றவர், அவர் தன்னை பிரபலப்படுத்தும் நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பதிலாக அரசாங்கத்திற்கு எதிராக துணிந்து கேள்வி எழுப்பும் ஹிருணிகா போன்றவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றார்.