மட்டக்களப்பில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்! சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
மட்டக்களப்பு - லொயிஸ் அவனியூர் வீதியில் நபரொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களையும் தொடர்ந்து 19ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி மட்டுநகர் லொயிஸ் அவனியூர் வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றிற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
முனைத்தீவு, பெரிய போரதீவு - களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய வல்லிபுரம் அன்பழகன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குற்றத்தடுப்பு பிரிவு விசாரணை
குறித்த சடலத்தை அவரது மனைவி அடையாளம் காட்டியதையடுத்து சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றிருந்தன.
மேற்படி விசாரணையில் சிசிடி கமரா ஒன்றினை சோதனையிட்ட போது உயிரிழந்தவரை, இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இரு தடவைகள் தாக்கிய காட்சிகள் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மேற்கொண்ட பிரேத பரிசோதனையில் உயிரிழந்தவரின் தலையில் கடுமையாக தாக்கியுள்ளதாகவும், தாக்குதல் காரணமாக மூளையில் ஏற்பட்ட இரத்தக்கசிவினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
இதனையடுத்து நகர்பகுதியைச் சேர்ந்த 22, 21 வயதுடைய இரு இளைஞர்களை கடந்த 13ம் திகதி சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்டுகப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்த சந்தேகநபர்கள் இருவரும் கடந்த 22ம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சூழ்நிலையிலேயே அவர்களை தொடர்ந்தும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நேற்றைய தினம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



