முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார் தாக்கல் செய்த மனுக்கள் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனி அக்டோபர் 9 ஆம் திகதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, 2013-ஆம் ஆண்டு ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் தோனிக்கு தொடர்பு இருப்பதாக ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் என்பவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் குற்றம்சாட்டியிருந்தார்.
100 கோடி ரூபாய் நஷ்டஈடு
இந்த நிலையில், இந்த குற்றச்சாட்டு தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, சம்பத்குமாருக்கு எதிராக 100 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி தோனி 2014 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார்.

இதன்போது, வழக்கின் ஆவணங்கள் மற்றும் சிடிகளை (CDs) மொழிபெயர்த்து நகலெடுப்பதற்கான செலவாக 10 இலட்சம் ரூபாயை செலுத்துமாறு நீதிமன்றம் ஏற்கனவே தோனிக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் சார்பில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
தோனியின் வாக்குமூல பதிவு
அவற்றில், தோனியின் வாக்குமூலத்தை (Deposition) பதிவு செய்யும்போது, அதை முழுமையாக காணொளியாக பதிவு செய்ய வேண்டும். காணொளி பதிவு செய்யப்பட்ட வாக்குமூலத்தின் எடிட் செய்யப்படாத சான்றளிக்கப்பட்ட நகலை தனக்கும், நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் கண்காணிப்பு அதிகாரிக்கும் வழங்க வேண்டும்.

தோனி ஒரு பிரபல கிரிக்கெட் வீரர் என்பதால், அவரது வாக்குமூலப்பதிவை நட்சத்திர ஹோட்டல்கள் அல்லது தனியார் இடங்களில் நடத்தாமல், நீதிமன்ற வளாகத்திலோ அல்லது அரசு கட்டடத்திலோ மட்டுமே நடத்த வேண்டும். போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
குறித்த மனுக்களை பரிசீலித்த நீதிபதி, இது குறித்து தோனி ஒக்டோபர் 9 ஆம் திகதிக்குள் பதிலளிக்குமாறு அறிவித்தல் அனுப்பி, வழக்கின் அடுத்த விசாரணையை ஒத்திவைத்தார்.