இலங்கை மக்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள அவசர அறிவித்தல்
அத்தியாவசியமான தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரசாங்கம் பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பொன்றை வழங்கியுள்ளது.
உலகின் ஏனைய நாடுகளைப் போன்றே இலங்கையிலும் கோவிட் தொற்று திரிபு வேகமாக பரவி வருவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதில் மேலும், இலங்கையில் கோவிட் தொற்றுக்கு இலக்காவோரில் 1.5 வீதமானவர்கள் மரணிக்கின்றனர். அதிக எண்ணிக்கையிலானவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர்.
நாட்டு மக்கள் முடிந்தளவு கோவிட் தடுப்பூசியை பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொள்வதன் மூலம் ஆபத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மக்கள் அதிகளவில் குழுமும் திருமண நிகழ்வுகள், மரண வீடுகள் மற்றும் வேறும் நிகழ்வுகளில் பங்கேற்பதனை முற்று முழுதாக தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் பொது இடங்களுக்குச் செல்லும் போது கட்டாயமாக முகக் கவசங்களை அணிந்து செல்லுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தொற்றா நோய்கள் ஏதும் காணப்பட்டால் பணி நிமித்தம் தவிர வேறும் தேவைகளுக்கு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
