சூடுபத்தினசேனையில் கோவிட் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் கலந்துரையாடல்
கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சூடுபத்தினசேனையில் கோவிட் - 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணித்த ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ,பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று(23) ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.00 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் ஏறாவூர் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சூடுபத்தின சேனையில் கோவிட் -19 பாதிப்பினால் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் நல்லடக்கத்திற்காக ஜனாஸாக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், இதுவரையில் 238 ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நாட்டில் தற்போது மிக வேகமாக கோவிட் - 19 தாக்கம் அதிகரித்து வருவதனால் நல்லடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.
குறிப்பிட்ட ஜனாஸாக்கள் நல்லடக்கம் செய்யப்படும் மையவாடியானது 03 ஏக்கர் நிலப்பகுதியினை கொண்டு எல்லை நிர்ணயிக்கப்பட்டதாகும்.
எதிர்காலத்தில் ஏற்படும் இடப்பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வினை காண வேண்டும் என்பது பற்றி இங்கு பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு இதற்கான மாற்று இடங்களை வெவ்வேறு மாவட்டங்களிலிருந்தும் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்துவதன் மூலம் இப்பிரச்சினைக்கான தீர்வினை கண்டுகொள்ள முடியுமெனத் தெரிவித்தனர்.
இவ்விடப்பற்றாக்குறை தொடர்பில் தான் ஏனைய 06 நாடாளுமன்ற உறுப்பினர்களோடு இணைந்து பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களுடனான சந்திப்பில் ஏற்கனவே இது தொடர்பில் கலந்துரையாடி உள்ளதாகவும் மிக விரைவில் அதற்கான தீர்வினை பெற்று தருவதற்கான நடவடிக்கையினை மேற்கொள்வேன் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மேலும் தற்போது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் சூடுபத்தின சேனைக்குச் செல்லும் பாதையினை கொங்ரீட் இட்டுச் செப்பனிடும் பொருட்டு ரூபா 67 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 03 ஏக்கர் நிலப்பரப்பைச் சுற்றிச் சுற்று வேலி அமைப்பதற்கான முயற்சியும் மேற்கொண்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் பணியில் ஈடுபடுகின்ற ஊழியர்களுக்கு மாதாந்தம் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் தன்னோடு அர்ப்பணிப்போடு செயற்பட்ட வைத்தியர். அன்வர் ஹம்தானி, அப்சர் ஹாஜியார், கே.ஆர்.ஏ சித்திக் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையோருக்கும் நன்றி தெரிவித்தார்.
ஜனாஸா நல்லடக்க விடயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்கள் அன்று முதல் இன்று வரை எடுத்து வரும் ஒவ்வொரு நகர்வுக்கும் கலந்து கொண்டவர்களால் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கண்டி மாவட்ட பள்ளிவாசல் சம்மேளன தலைவர் கே.ஆர்.ஏ. சித்திக்,
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் உபதலைவரும், கண்டி மாவட்ட ஜம்மியதுல்
உலமா சபையின் தலைவருமான எச். உமர்தீன் மௌலவி, கண்டி மாவட்ட சம்மேளன
உறுப்பினர்கள் எச்.எம் எம். இல்ஹாம் மற்றும் எல்.ஏ.எல்.யூ.நளீர் , கல்குடா
ஜம்மியதுல் உலமா சார்பாக உபதலைவர் மௌலவி தாஹிர் ஹாமி, செயலாளர் இஸ்ஸத்
மௌலவி மற்றும் உறுப்பினர்கள், மீராவோடை பள்ளிவாயல் தலைவர் அலியார் ஹாஜி,
கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.டி. றிஸ்வி, பிரதேச சபை
செயலாளர் சிஹாப்தீன், ஏறாவூர் சம்மேளனத் தலைவர் எம்.எம் முஹைதீன், செயலாளர்
ஏ.எல். முனீர், மற்றும் , நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் இசட்.எம்.
ஹிதாயதுல்லாஹ் , ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளரும் இணைப்பு செயலாளருமான
ஏ.ஏ நாசர் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.



