நாட்டில் புதிய மாறுபாட்டைக் கொண்ட கோவிட்- 19 தொற்று - விழிப்புடன் செயற்படுமாறு பொது மக்களிடம் வேண்டுகோள்
நாட்டில் புதிய மாறுபாட்டைக் கொண்ட கொரோனா தொற்றுக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, கூடுதல் விழிப்புடன் நடந்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் தமது நடமாட்டங்களை கட்டுப்படுத்துவதுடன், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார சேவைகளின் துணை பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
புதிய மாறுபாடு மிகவும் பரவக்கூடியது என்பதால், சுகாதார வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிப்பது மற்றும் நடமாட்டங்களை கட்டுப்படுத்துவது அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேவையின்றி நிகழ்ச்சிகளையும், விருந்துபசாரங்களையும் ஒழுங்கமைக்க வேண்டாம் என்றும் அவர் கோரியிருக்கிறார்.
அத்துடன் திருமணங்கள் மற்றும் இறுதி சடங்குகள் நடைபெறும் போது, மக்கள் முகமூடி அணிந்து சமூக தூரத்தை பராமரிக்குமாறு பொதுமக்களை கேட்டுக்கொள்வதாக ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவர்களுடன் ஒன்றிணைய வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.