சுவிஸ் நாட்டின் கோவிட் - 19 நிலவரம்! வெளியாகியுள்ள அரசின் அறிவிப்புகள்
சுவிஸ் சுகாதார அமைச்சர் அலான் பெர்சே, சுகாதாரத்துறை அதிகாரிகள் நோறா குறோனிக், பத்திறிக்ஸ் மத்திஸ் ஆகியோர் பங்கெடுத்த ஊடக சந்திப்பு 03.02.2021 நடைபெற்றது.
சுவிஸ் சுகாதாரத்துறையின் தகவலின் படி 03. 02. 2021 நோய்த்தொற்று நிலை கடந்த நாட்களில் 1796 புதிய தொற்றுக்கள் பதிவாகி உள்ளன. 7 நாட்களுக்கு சராசரி 1582 தொற்றுக்கள் பதிவாகி உள்ளன, இது கடந்த கிழமையை விடவும் 15 வீதம் குறைவானதாகும். இப்படிநிலையில் சுவிசில் மகுடநுண்ணி நோய்த் தொற்றின் பரவல் குறைந்துகொண்டு செல்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த நாட்களில் நடைபெற்ற 100 பரிசோதனைகளில் 8 ஆட்களுக்கு நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது கடந்த கிழமையுடன் ஒப்பிட்டால் ஒருவீதம் குறைவாகும். கடந்த 7 நாட்களில் நாளொன்றிற்கு 24,296 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன. 42 இறப்புக்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.
இதன்படி ஒரு கிழமைக்கு 28 இறப்புக்கள் கணக்கிடப்பட்டுள்ளது. இது கடந்த கிழமையை விடவும் 35 வீதம் குறைவானதாகும். சுவிஸ் அரசின் தகவலின்படி தற்போது 1,349 ஆட்கள் மருத்துவமனையில் தங்கி மகுடநுண்ணித் தொற்றுக்கு மருத்துவம் செய்துகொண்டுள்ளனர். கடந்த கிழமையைவிட இது 15வீதம் குறைவாகும்.
மருத்துவமனைகளில் தீவிர மருத்துவத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள படுக்கைகளில் 84.0 வீதம் பயன்பாட்டில் உள்ளது. சுவிஸ் நடுவனரசு 3 புதிய ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளது குறெவாக் எனும் யேர்மன் நாட்டு மருந்து நிறுவனத்திடமும் அத்துடன் சுவீடன் நாட்டு நிறுவனத்திடமும் சேர்த்து 50 இலட்சம் தடுப்பூசிகளை பெறுவதற்கும், மேலும் நோவாவக்ஸ் நிறுவனத்திடம் 60 இலட்சம் தடுப்பூசிகளை பெறுவதற்கும் 3 புதிய ஒப்பந்தகளில் சுவிஸ் அரசு கைச்சாத்திட்டுள்ளது.
இதன்படி சுவிஸ் வாழ் மக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2 தடுப்பூசிகளைப் பெறுவதற்கு வழிசெய்துள்ளதாக சுவிஸ் அரசு அறிவித்துள்ளது. அத்துடன் முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்ட மொடேர்னா நிறுவனத்திடம் மேலும் 60 இலட்சம் மகுடநுண்ணித் தடுப்பூசிகளை பெறுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
தடுப்பூசி விரிவுபடுத்தப்பட்டுள்ளது சுவிஸ் வாழ் மக்களது தடுப்பூசி செலவை மட்டுமல்லாது, சுவிசின் அண்டைய நாடுகளில் இருந்து சுவிசிற்குள் பணிபுரியும் தொழிலாளர்களினதும், அதுபோல் சுவிசில் வாழ்ந்தாலும் உரிய மருத்துவக்காப்புறுதி இல்லாதவர்களதும், இராஜதந்திரிகளாகப் பணியாற்றுபவர்களதும் தடுப்பூசி செலவினை சுவிஸ் நடுவனரசு ஏற்றுள்ளது.
இவ் விரிவுபடுத்தலின்படி புதிதாக சுவிஸ்வாழ் மக்களைவிட மேலதிகமாக 150 000 ஆட்களுக்கு தடுப்பூசி இடுவதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது. இது சுவிஸ் அரசிற்கு மேலும் 35 இலட்சம் சுவிஸ் பிராங் செலவினை அதிகரித்துள்ளது. இவ்விதி பின்னோக்கிய திகதி 04. 01. 2021 முதல் செல்லும் என சுவிஸ் அறிவித்துள்ளது.
சுகாதார அமைச்சர் பெர்சே நோய்த்தொற்று குறைந்து வருவது மகிழ்ச்சி அளித்தாலும், தொற்றுக்காலத்திற்குள் தொற்றாக உருமாறிய புதிய மகுடநுண்ணித் தொற்றுத் தொடர்பாக சுகாதார அமைச்சர் கவலை தெரிவித்தார். புதிய வகை மகுடநுண்ணி 40 – 50 வீதம் வேகமாகப் பரவுவது ஓர் இரண்டக நிலை என்றார் சுகாதார அமைச்சர்.
இக் குழப்பத்தில் இருந்து நாம் காத்துக்கொள்ள உரிய வழிமுறையைத் தேடவேண்டும் என்றார் அலான் பெர்சே. மேலும் தெரிவிக்கையில் இங்கிலாந்து வகை நுண்ணி ஒருகிழமைக்கு 2000 புதிய தொற்றாக இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இது மருத்துவமனைகளின் பணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
தென்னாப்பிரிக்கா வகை நுண்ணித் தொற்று அதிகளவில் இனங்காணப்படவில்லை. பத்து மாநிலங்களில் மறுபெருக்க விகிதம் 1க்கும் மேற்பட்டதாக உள்ளது. ஆகவே பெப்பிரவரி 2021 நிறைவுவரை முடக்கங்கள் தொடரும். தற்போது தளர்வுகள் எதனையும் அறிவிக்க எவ்வாய்ப்பும் தெரியவில்லை என்றார் சுகாதார அமைச்சர்.
பல்வேறு உற்பத்தியாளர்கள் கடந்த நாட்களில் தடுப்பூசி வில்லைகளைப் பெற்றுக்கொள்வதில் காலம் தள்ளிப்போவது வருத்தத்திற்கு உரியது, இருந்தபோதும் சுவிஸ் வாழ் மக்கள் அனைவருக்கும் தேவையான அளவு தடுப்பூசிகளை நாம் பெற்றுக்கொள்ள புதிய ஒப்பந்தங்களும் வழி செய்துள்ளன. பல்வேறு தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து நாம் தடுப்பூசி பெற்றுக்கொண்டு கோடைகாலத்திற்குள் விருப்புள்ள அனைவருக்கும் தடுப்பூசி இட்டுவிடுவோம் எனும் நம்பிக்கை எமக்குள்ளது என்றார் சுகாதார அமைச்ர்.
மார்ச் 2021 மார்ச் 2021ல் எந் நடவடிக்கைகள் தொடரப்படும் என்பதை நாம் இன்னும் 2 கிழமைகள் கடந்துதான் தெரிவிக்க முடியும் என்றார் பெர்சே. பெப்பிரவரி 2021 நிறைவுக்குள் தளர்வுகள் அறிவிக்க முடியும் எனத் தான் நம்பவில்லை என்றும் தனது கூற்றினை சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
ஊடகவியலாளர் ஒருவர் புதிய வகை உருமாறிய நுண்ணித் தொற்றுப் பரவல் வேகம் எடுத்துள்ளபோதும் சுவிஸ் அரசு ஏன் மேலும் முடக்கத்தை அறிவிக்கவில்லை எனும் கேள்வியை சுகாதார அமைச்சரிடம் விடுத்தார். இதற்கு இவ்வாறு சுகாதார அமைச்சர் பதிலளித்தார், “நாம் சமூகத்தில் சமநிலை கெடாது எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். மேலும் தடுப்பூசியும் தொற்றைக் கட்டுப்படுத்தும் என நம்புகின்றோம்.
சூழலை கண்காணிப்பதற்கு எமக்கு மேலும் காலம் தேவைப்படுகின்றது.” ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் இல்லை? இதற்கு சுவிஸ் சுகாதாரத்துறை அதிகாரி நோறா இவ்வாறு பதில் அளித்தார். நாம் தொடர்ந்தும் அந் நிறுவனத்துடன் பேச்சுவார்தை நடாத்தி வருகின்றோம்.
பெறுபேறு கிடைத்தவுடன் அறிவிப்போம் என்றார். சுவிஸ் குடிமக்கள் தொகையைவிட தடுப்பூசியின் தொகை ஏன் அதிகமாக உள்ளது? சுகாதாரத் துறை அதிகாரி நோறா இதற்கு பதில் அளித்தார், நாம் உரிய காப்புடன் இருக்க விரும்புகின்றோம். மேலும் தடுப்பூசியின் செயல்திறன் காலம் எதுவரை என்பது உறுதியாகத் தெரியாத நிலையில் போதிய அளவு தடுப்பூசியைக் கையிருப்பில் வைத்திருக்க எண்ணுகின்றோம் என்றார்.
பாடசாலை பூட்டப்படுமா? பாடசாலையைப் பூட்டும் அதிகாரம் மாநிலங்களிடம் உள்ளது, நடுவனரசு அவ்வாறான முடிவெதையும் எடுக்கவில்லை என்றார் சுகாதார அமைச்சர். சுகாதரத்துறை அதிகாரி பத்திறிக் தெரிவிக்கையில் குழந்தைகள் நுண்ணியைக் பரப்பும் தன்மை கொண்டவர்கள் என்பதை அறிவோம்.
சூழலிற்கு ஏற்ப முடிவுகள் எட்டப்படும் என்றார். உயிர்த்த ஞாயிறுக்குள் (ஈஸ்டர்) அனைவருக்கும் தடுப்பூசி இடப்படுமா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இக் கேள்விக்குப் பதில் அளித்திருந்தால், எனது பதிலில் நம்பிக்கை கொண்டிருக்க மாட்டீர்கள். ஆனால் தற்போதைய சூழலில் அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதில் எச்சிக்கலும் இல்லை என்றே பதில் அளிக்கின்றேன்.
உரிய தடுப்பூசி போதிய அளவும், புதிதாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் ஊடாக தேவையான அளவு தடுப்பூசியும் எம்மிடம் உள்ளன. வசந்தகாலம் முதல் நாம் முழுவீச்சில் தடுப்பூசி இடும் பணியை முடக்கிவிட உள்ளோம். ஆகவே இது வாய்ப்புள்ள பணியே என்றார் சுகாதார அமைச்சர். அஸ்ட்ரா-செனெக்கா நிறுவனத்தின் ஊசி தற்போதைக்கு அஸ்ட்ரா-செனெக்கா நிறுவனத்தின் தடுப்பூசிகளை சுவிசில் இடுவதற்கு சுகாதாரத்துறை தடை அளித்துள்ளது.
இந்நிலையில் இது தடுப்பூசி இடும் பணியைப் பாதிக்காதா என ஊடகவியலாளர் ஒருவர் கேட்டார். இதற்கு சுகாதாரத்துறை அதிகாரி நோறா இவ்வாறு பதில் அளித்தார், இல்லை, இரு காலாண்டுகளில் ஒன்றில் அதிக ஊசிகளும் மற்றைய காலாண்டில் குறைவாகவும் இருக்கலாம்.
மேலும் ஊசி இடுவதற்கு இணக்கம் கொண்ட மக்கள் தொகையைப் பொறுத்து இக்கேள்விக்கு பதிலளிக்கலாம். இப்போது ஊகம் தெரிவிக்க முடியாது என்றார்.
ரஷ்யா தடுப்பூசியான ஸ்புற்னிக் சுவிசில் பாவனைக்கு வருமா? நாம் தொடக்கம் முதல் பல்வேறுபட்ட உபாயங்களைக் கையாண்டு வருகின்றோம். ரஷ்யாவுடன் சுவிற்சர்லாந்திற்கு இருக்கும் செயல்முறை நடைமுறை உறவிற்கு ஏற்ப இதுமாறுபடுகின்றது.
தற்போதைக்கு இதுதொடர்பில் மேலும் கூறமுடியாது என்றார் நோறா. கோடை காலம் விடிவுகாலமா? கோடைகாலத்தில் விடிவு கிடைக்கும் என்று நம்பலாமா என வினாவப்பட்டது. இதற்கு சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்,
அனைவரும் 6ம், 7ம் மாத்திற்குள் தடுப்பூசி இட்டுக்கொண்டால் நல்ல விளைவுகளை எதிர்பார்க்கலாம். ஆனாலும் தற்போது எமக்குத் தெரியாத பல விடயங்களும் நாளை காலச் சூழலை தீர்மானிக்கலாம்.
கத்திமுனைக்கு வழி தேடுகின்றோம் எனும் சுவிஸ் பழமொழியை சுட்டிக்காட்டிய பெர்சே, எதுவானாலும் கோடை காலம் தளர்வுகளை அளிக்கும் எனத் தான் நம்புவதாகத் தெரிவித்தார். வாக்குறுதி அளிக்க முடியாது உணவகங்கள், நிகழ்வுகள் எப்போது மீண்டும் நடக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த சுகாதார அமைச்சர், கடந்த ஒக்டோபரில் இருந்த சூழலை அறிவீர்கள், புதியவகை உருமாறிய நுண்ணியும் அதன் தன்மையும் முற்கூட்டிக் கணிக்க முடியா சூழலை ஏற்படுத்தி உள்ளது. ஆகவே மார்ச் 2021வரை எந்த வாக்குறுதியையும் அளிக்கமுடியாதுள்ளது என்றார்.
போர்த்துக்கல் நாட்டில் நிலவும் சூழலை சுவிஸ் கவனிக்கின்றதா? இதற்குப் பதில் அளித்த சுகாதார அதிகாரி மத்திஸ், நாம் கடந்த நாட்களில் போர்த்துக்கல் நாட்டில் நிலவும் சூழலை உன்னிப்பாக கவனித்து வருகின்றோம்.
அதுபோன்ற சூழல் சுவிஸ் நாட்டிற்கு ஏற்படாமல் இருக்க எமது நடவடிக்கைகள் செயல்படுத்தப்படுகின்றன. போர்த்துக்கல் நாட்டில் நிலவும் சூழல் மிகவும் ஆபத்தானது. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து கடுமையான நடவடிக்கைகள் ஊடாக தொற்றுத் தொகையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளன இதனையும் நாம் கவனத்தில் கொண்டுள்ளோம் என்றார்.
தடுப்பூசிக்கு ஆகும் செலவு இதுவரை சுவிஸ் தடுப்பூசிக்கு செலவிட்டிருக்கும் தொகை எவ்வளவு என வினாவப்பட்டது, சுகாதாரத்துறை அதிகாரி நோறா குறோனிக் இதற்கு இவ்வாறு பதில் அளித்தார், "மொத்தமாக 800 மில்லியன் சுவிஸ் பிராங் தடுப்பூசிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நாம் இதுவரை 309 மில்லியன் சுவிஸ் பிராங் செலவுடன் எம் பணிகளை தொடங்கி உள்ளோம். இவ்வுடன்பாடு சுவிஸ் பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து எட்டப்பட்டதாகும் என்றார்" மார்ச் 2021ல் வழமை திருப்புமா எனும் கேள்விக்கு இன்னும் 2 கிழமைகளில் சுவிஸ் அரசு பதிலளிக்க உள்ளது, அதுவரை காத்திருப்போமாக!