யோசித ராஜபக்சவுக்கு தொடரும் ஏமாற்றம்
வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விடுத்த கோரிக்கை தொடர்பில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம நேற்று அறிவித்துள்ளார்.
அது தொடர்பான உத்தரவை உயர் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் அறிவுறுத்தினார்.
மேலும் அறிவித்தல் கிடைத்ததும் கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு யோசித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட ஆகிய இருவருக்கும் நீதவான் உத்தரவிட்டார்.
வெளிநாடு செல்ல அனுமதி மறுப்பு
இந்த நிலையில் சந்தேக நபரான யோசித ராஜபக்ச சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, யோசித ராஜபக்ச, வர்த்தக உச்சி மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு செல்ல வேண்டியுள்ளதால், தற்போது விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

இதன்போது நீதவான், சந்தேக நபருக்கு எதிராக லஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனால் இந்த கோரிக்கைக்கான உத்தரவை வழங்க முடியாது என்றும், அது தொடர்பான உத்தரவை மேல் நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளுமாறும் குறிப்பிட்டார்.
நீதவான் நீதிமன்றில் இந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாகவும் நீதவான் தெரிவித்தார்.