கிழக்கில் இடம்பெற்ற 5 கொலைகள்! பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட மூவரின் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டம்
இந்த வழக்கு இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் காணொளி ஊடாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் எனக் கூறப்படும் முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகிய இருவரும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், பிள்ளையான் காணொளி ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டார்.

2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஐந்து கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
கல்லடி பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், காத்தான்குடியில் TMVP கட்சி உறுப்பினர் ஒருவர் உள்ளிட்ட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் வவுணதீவு, கரையாக்கன்தீவு பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவை இதில் அடங்குகின்றன.
இந்தச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பிள்ளையான், முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்தனர்.
பிள்ளையான் கடந்த 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், முகமட் சிபான் மற்றும் முகமட் சகீத் ஆகியோர் 2025 நவம்பர் மாதம் CIDயினரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இன்றைய விசாரணையின்போது CIDயினர், குறித்த கொலைச் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூவருக்கு எதிராக சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
இதனையடுத்து, பிள்ளையான் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி சௌந்தரநாயகம், சிறையில் பிள்ளையானுக்கு வழங்கப்படும் உணவு தொடர்பிலும், அவரது தாயாருடன் தொலைபேசி ஊடாக உரையாடுவதற்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறைச்சாலை அதிகாரியை அழைத்த நீதவான், பிள்ளையானின் உணவு மற்றும் அவரது தாயாருடன் தொலைபேசி ஊடாக உரையாடுவது தொடர்பான அறிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
அத்துடன், பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
இதேவேளை, லண்டனில் தலைமறைவாகியுள்ளதாகக் கூறப்படும் முகமட் பாய்ஸ் எனப்படும் ‘பொலிஸ் பாய்ஸ்’ என்பவரை கைது செய்வதற்கான பிடியாணை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்வதற்கான கடிதம் சர்வதேச பொலிஸ் அமைப்பான இன்டர்போலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக CIDயினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
மேலதிக தகவல்- பவன்