மன்னாரில் நீதிமன்ற உத்தரவுக்கமைய ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு நடவடிக்கை
மன்னார் (Mannar) - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய அகழ்வு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
குறித்த அகழ்வு நடவடிக்கை, இன்று (27) காலை பேசாலை பகுதியில் அடையாளம் காணப்பட்ட இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் குறித்த அகழ்வு நடவடிக்கைகளின் போது எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.
நீதவான் உத்தரவு
பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முருகன் கோவில் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் நிலையில் கடற்படை அதிகாரி ஒருவர் உள்ளடங்களாக 8 பேர் கடந்த சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அதனையடுத்து, அவர்களிடம் இருந்து ஸ்கேனர் இயந்திரம் உள்ளடங்களாக புதையல் தோண்ட பயன்படுத்திய பொருட்களும் மீட்கப்பட்டிருந்தது.
பேசாலை பொலிஸார் குறித்த 8 பேரையும் விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்திய நிலையில், குறித்த நபர்களை இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
ஊடகவியலாளர்களுக்கு மறுக்கப்பட்ட அனுமதி
இந்நிலையில், நீதவான் அனுமதி வழங்கியதற்கமைய, புதையல் தோண்டியதாக கூறப்படும் இடத்தில் அகழ்வு பணியை பேசாலை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
எனினும், குறித்த பகுதியில் பெக்கோ இயந்திரம் பயன்படுத்தி அகழ்வு பணிகள் நடைபெற்ற போது, எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை.
அகழ்வு பணியின் போது புகைப்படம் மற்றும் காணொளி எடுக்க ஊடகவியலாளர்களுக்கு பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அனுமதி வழங்கவில்லை.
இதேவேளை, மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய 8 சந்தேக நபர்களையும்
எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டமை
குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |