கொழும்பில் பில்லியன் கணக்கான பணத்தை மோசடி செய்த பெண்! நீதிமன்றம் வழங்கியுள்ள விசேட உத்தரவு
கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்த நிதிக்குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, இன்று மீண்டும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதன்படி, சந்தேகநபர் கொழும்பு, கோட்டை ரிட்ஸ்-கார்ல்டன் வீட்டுத்தொகுதியின் பிரதான அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பிரதான அலுவலகத்தில் சில சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த காலங்களில் சர்ச்சைக்கு வழிவகுத்த பிரபலமற்ற கிரிஷ் ஒப்பந்தத்துடன் இந்த அடுக்குமாடி குடியிருப்பும் தொடர்புடையது என்று கூறப்பட்டுள்ளது. பின்னர், சந்தேகநபர் மீண்டும் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
பில்லியன் கணக்கான மோசடி
திலினி பிரியமாலி பிற்பகல் 3.25 மணியளவில் மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திலினி பிரியமாலிக்கு சொந்தமான கோட்டை உலக வர்த்தக நிலையத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தின் பல ஊழியர்களின் தொலைபேசிகளையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
அதேவேளை, திலினி பிரியமாலிக்கு சொந்தமான பல தொலைபேசிகள் தற்போது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, சமூகவலைத்தளங்களில் பரவி வரும் திலினி பிரியமாலி தொடர்பான ஒலிப் பதிவுகளை பயன்படுத்தி விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரி குறிப்பிட்டார்.