ஜெரோம் மீதான மத நிந்தனை வழக்கு விவகாரம்: உயர் நீதிமன்று வழங்கியுள்ள தீர்ப்பு
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு (Jerome Fernando) எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை பிரதம நீதியரசர் தலைமையிலான அமர்வின் முன்னிலையில் பரிசீலிக்குமாறு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சர்ச்சைக்குரிய சுயபிரகடனப்படுத்தப்பட்ட தீர்க்கதரிசியான ஜெரோம் பெர்ணான்டோ, மற்ற மதங்களை விமர்சித்ததாகக் கூறப்படும் கருத்துக்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் (UN) சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நிபந்தனை பிணை
இதனையடுத்து, ஜெரோம் பெர்னாண்டோ மீதான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடந்த மே மாதம் உயர்நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தது.
முன்னதாக, பெர்னாண்டோ கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தாலும் பின்னர் ஜனவரி மாதம் கொழும்பு கோட்டை (Colombo Kotte) நீதவான் நீதிமன்றத்தால் அவருக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, விசாரணைகள் நடைபெற்று வருவதால், அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்பட்டு பின்னர் தடையும் தற்காலிகமாக நீக்கப்பட்டது.
அதேவேளை, வெளிநாட்டில் இருந்து அவரது கணக்கில் பெரும் தொகை பணம் வைப்பு செய்யப்பட்டிருப்பது குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |