அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு(Ramanathan Archchuna) எதிராக மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளைத் தாக்கல் செய்யுமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
செல்லுபடியாகும் சாரதி அனுமதி பத்திரம் இன்றி மோட்டார் வாகனத்தை செலுத்தி போக்குவரத்து அதிகாரிகளின் கடமையைத் தடுத்ததாகவும், குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தி போக்குவரத்து பொலிஸாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் அர்ச்சுனா எம்.பி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி
கடந்த 20 ஆம் திகதி இரவு அனுராதபுரத்தின் தலாவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து விசேட பொலிஸ் குழுவால் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டார்.
அன்றையதினம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சில மணிநேரங்களில் அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டார்..
அனுராதபுர நீதவான் நீதிமன்றத்தால், 2 லட்சம் ரூபா கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டார்.
குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்றையதினமான பெப்ரவரி 3 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |