திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்.. தேரருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் புத்தர் சிலை சம்பவம் தொடர்பில் பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் எம்.என்.எம். சன்சுதீன், டிசம்பர் 10ஆம் திகதிக்கு முன்னர் குறித்த தேரர் முன்னிலையாக வேண்டும் என இன்று (24.11.2025) நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரைக்குச் சொந்தமான காணியில் புத்தர் சிலையை நிறுவச் சென்றபோது, நடந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்க மறுத்ததால், பொலிஸார் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்திருந்தனர்.
பகுப்பாய்வு அறிக்கை
நீதிமன்றத்தில் பி அறிக்கையை சமர்ப்பித்த திருகோணமலை துறைமுக பொலிஸ், 16ஆம் திகதி ஏற்பட்ட குழப்பத்தின் பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலாங்கொட கஸ்ஸபா தேரரிடம் வாக்குமூலம் பெற முயற்சித்ததாகவும், ஆனால் அவர் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 184இன் கீழ் இது தண்டனைக்குரிய குற்றம் என்றும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பது அனைத்து குடிமக்களின் கடமை என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்த பொலிஸார், நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் ஒரு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்காததால் அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், பலாங்கொட கஸ்ஸப தேரரின் தற்போதைய வதிவிடத்தைக் கண்டுபிடிக்க முடியாததால், தேரர் பயன்படுத்திய மொபைல் தொலைபேசி எண்ணிற்கான தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையை வழங்குமாறு தனியார் தொலைபேசி நிறுவனத்தின் மேலாளருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |