வெள்ளவத்தையில் வெளிநாட்டவர்களை விடுதிக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த தம்பதி
கொழும்பு - வெள்ளவத்தை பகுதியிலுள்ள விடுதி ஒன்றின் அறைக்குள் 4 வியட்நாம் பிரஜைகளைப் பலவந்தமாகத் தடுத்து வைத்து தாக்கிய தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியட்நாம் நாட்டை சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய தம்பதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள நிறுவனம் ஒன்றின் சீன மேலாளர் ஒருவர் 2000 அமெரிக்க டொலர் தொகையை மோசடி செய்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
விடுதிக்குள் தாக்குதல்
அதற்கமைய, முறைப்பாட்டாளர் குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பாக நான்கு வியட்நாம் பிரஜைகளை பொலிஸாரிடம் முன்னிலைப்படுத்தியிருந்தார்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் சிலரால் அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன் 2 நாட்களாகத் தங்கியிருந்த அறைக்குள் தடுத்து வைத்துத் தாக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த நான்கு வியட்நாம் பிரஜைகளுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
தம்பதி கைது
அதற்கமைய, தாக்குதலுக்கு உள்ளான நான்கு வியட்நாம் பிரஜைகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களுக்கு தாக்குதல் நடத்தியதுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான தம்பதியினரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளனர்.
கொழும்பு தெற்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஷன் சூரியபண்டாரவின் பணிப்புரையின் பேரில் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்பு | சிறப்பு நேரலை