சவால்களுக்கு ஈடுகொடுக்கும் முறைமையே நாட்டுக்குத் தேவை : ஜனாதிபதி சுட்டிக்காட்டு
சாவால்களைக் கண்டு அஞ்சாது அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் தமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து முன்னேற்றிச் செல்லும் சந்ததியை இந்த நாட்டுக் கல்வியின் மூலம் உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு தனியார் ஹோட்டலில் நடைபெற்ற வெஸ்லி கல்லூரியின் 150 ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
துறைசார் விடயங்கள்
மேலும் தெரிவிக்கையில், ”வெஸ்லி கல்லூரியின் 150ஆவது ஆண்டுப் பூர்த்தி விழாவில் பங்கேற்கக் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியது. அதேபோல் சுதந்திர இலங்கையைக் கட்டியெழுப்புதற்கு வெஸ்லி கல்லூரி ஆற்றிய சேவைக்கும் நன்றி கூறுகிறேன்.
இந்த பாடசாலையில் பல சிரேஷ்டர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர். அதனாலேயே இன்றும் நாம் எமது நாட்டுக்கு சேவையாற்றுகிறோம். தப்பியோடுவதற்கு நானும் நீங்களும் படிக்கவில்லை. மாறாக எமது கொள்கைகளில் உறுதியாகவிருந்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் முன்னேறிச் செல்லவே நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
கல்வி முறையினால் அந்த படிப்பினையே கிடைக்க வேண்டும். பாடநூல் கல்வி, புதிய தொழில்நுட்பம், விளையாட்டு என பல துறைசார் விடயங்களையும் நீங்கள் கற்க வேண்டும்.
தற்போது நாம் பாடசாலைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பிலான சங்கங்களை உருவாக்க உள்ளோம். AI தொடர்பிலான சட்டத்தையும் கொண்டு வரவுள்ளோம்.
ஆங்கிலக் கல்வி
செயற்கை நுண்ணறிவு தொடர்பிலான ஆய்வுகளுக்காகவும் ஒரு பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம். இந்தச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் போது நாம் சிறந்த எதிர்காலத்தை நோக்கி பயணிக்க முடியும்.
மேலும், கோவிட் காரணமாக பரீட்சைகளை நடத்தும் காலப்பகுதி தொடர்பில் ஏற்பட்டிருந்த நெருக்கடிகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளன.
எனினும், ஆங்கிலக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய பல பாடசாலைகள் உள்ளன. வெஸ்லி கல்லூரி போன்ற பாடசாலைகளுக்கு அது தொடர்பிலான பெரும் பொறுப்புகள் உள்ளன.
இந்த கல்லூரி இலங்கையை வடிவமைத்த கல்லூரி என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். எதிர்காலத்திலும் அதனை செய்ய முடியும் என நம்புகிறேன் ” என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |