ஊழல்வாதிகள் தப்ப முடியாது! பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவிப்பு
நாட்டில் ஊழல் மற்றும் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்கள் எவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்துவிடவே முடியாது என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(6.7.2026) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, நாட்டில் ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகத் தராசு பார்க்காமல் சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுப்பது தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசின் முதன்மைப் பொறுப்பாகும்.
அரசியல் பழிவாங்கல்
இதனைச் சிலர் 'அரசியல் பழிவாங்கல்' எனப் பூசி மெழுகப் பார்க்கின்றனர். ஆனால், இதுவொருபோதும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை அல்ல.
மாறாக, ஊழலுக்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டு மக்களும் எமக்கு வழங்கியுள்ள வரலாற்று ஆணைக்கு மதிப்பளித்து, அதனை நடைமுறைப்படுத்தும் தூய்மையான செயற்பாடாகும்.

எனவே, யார் எந்தவொரு உயர் பதவியில் இருந்தாலும், சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்களே.நாட்டில் நீண்டகாலமாகப் புரையோடிப் போயிருந்த ஊழல் அரசியல் கலாசாரத்தை வேரோடு மாற்றி, தூய்மையான சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் இறுதி நோக்கமாகும்.
ஊழல் மற்றும் மோசடிகளை ஒழிப்பதற்கான எமது இந்த ஒட்டுமொத்த நடவடிக்கைகள் எவ்விதத் தொய்வுமின்றித் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.