ஏழு வாரங்களில் அதிகரித்துள்ள கொரோனா தொற்றாளார்கள் - உலக சுகாதார அமைப்பு
உலகம் முழுவதும் புதிய கோவிட் வைரஸ் நோய் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஏழு வாரங்களில் முதல் முறையாக அதிகரித்துள்ளது என உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியஸ் நேற்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடலின் ஆறு பிராந்தியங்களில் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கோவிட் வைரஸ் குறித்த உலக சுகாதார அமைப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கேப்ரியஸ் இதனை கூறியுள்ளார்.
"இது ஏமாற்றமளிக்கிறது, ஆனால் ஆச்சரியப்படுவதற்கில்லை, உலக சுகாதார அமைப்பு இந்த அதிகரிப்பைப் புரிந்து கொள்ள நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பொது சுகாதார நடவடிக்கைகளில் தளர்வு, வைரஸ் பரவுதல் மற்றும் தொற்று நோயாளர்கள் பொதுமக்கள் கைவிடப்படுவதால் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் கேப்ரியஸ் குறிப்பிட்டுள்ளார்.
பொது சுகாதார நடவடிக்கைகள் கோவிட் பரவல் தடுப்புக்கான அடிப்படையாகும் எனவும் வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளை மட்டுமே நம்புவது அரசாங்கங்கள் செய்யும் தவறு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட உலக சுகாதார அமைப்பின் அவசர திட்டப் பணிப்பாளர் மைக் ரியான், கோவிட் தொற்றுநோய் 2022 வரை நீடிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.