48 மணிநேரத்தில் 7000 PCR பரிசோதனையால் சர்ச்சை - விசாரணைகளை மேற்கொள்றுமாறு ஜனாதிபதி உத்தரவு
துல்ஹரிய ஆடை தொழிற்சாலை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை மூலம் 400 பேர் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக உறுதியாகியுள்ளது.
அவ்வாறு உறுதி செய்யப்பட்ட அறிக்கைகளை அழித்ததாக கூறப்படும் தனியார் வைத்தியசாலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த தொழிற்சாலையின் ஊழியர்கள் 4000 பேருக்கு குறித்த வைத்தியசாலையில் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவை சுகாதார பரிந்துரைகளின்றி மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அங்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளை ஒப்படைக்குமாறு கடந்த புதன்கிழமை சுகாதார அமைச்சினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்போது அதனை அழித்து விட்டதாக குறித்த தனியார் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் குறித்த அறிக்கையை அழித்தமையினால் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய சுகாதார பணிப்பாளர் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை கோரியுள்ளார்.
நாள் ஒன்று 1200 PCR பரிசோதனை மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், குறித்த வைத்தியசாலையில், வாரத்தில் இரண்டு நாட்களுக்கு 7000 PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.