உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதல் : வரலாற்றுச் சிறப்புமிக்க மதஸ்தலம் தீக்கிரை - 11 பேர் பலி
உக்ரைனின் தலைநகர் கிவ், கார்கிவ் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா விடியற்காலையில் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த கோரத் தாக்குதலில் 53க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதோடு, சுமார் 1,40,000 வீடுகளுக்கான மின்சார விநியோகமும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக மோதி வெடித்ததில்
குறிப்பாக, யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட கிவ்-பெச்செர்ஸ்க் லாவ்ரா மடாலய வளாகத்தில் உள்ள, 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'டோர்மிஷன் கதீட்ரல்' தேவாலயத்தின் கூரை மீது ரஷ்யாவின் காமிகாசி ட்ரோன் ஒன்று நேரடியாக மோதி வெடித்ததில் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்துவதற்குள், அங்கிருந்த விலைமதிப்பற்ற மத வழிபாட்டுச் சின்னங்களையும் புனித ஓவியங்களையும் துறவிகளும் மீட்புப் படையினரும் மனிதச் சங்கிலி அமைத்து பத்திரமாக மீட்டனர்.
மேலும், அங்குள்ள புகழ்பெற்ற தேசிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் ஆடை காப்பகமும் இந்தத் தாக்குதலில் சிதைக்கப்பட்டு, சுமார் 1,00,000 வரலாற்று ஆடைகள் எரிந்து சாம்பலாகின.
இந்த கொடூரமான தாக்குதலை 'மனிதநேயத்திற்கும், வரலாற்றிற்கும், கிறிஸ்தவத்திற்கும் எதிரான குற்றம்' என்று உக்ரைனிய ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தின் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்திற்கு அவசர வேண்டுகோள்
இதற்கிடையே, கார்கிவ் நகரில் ரஷ்யா நடத்திய இரட்டைத் தாக்குதலில், முதல் தாக்குதலுக்குப் பின் தீயை அணைக்க முயன்ற 5 உக்ரைனிய மீட்புப் படை வீரர்கள் இரண்டாவது ட்ரோன் வெடித்ததில் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

இச்சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்யாவின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு ஜி7 நாடுகள் தீர்க்கமான மற்றும் கடுமையான பதிலை அளிக்க வேண்டும் என்றும், உக்ரைனின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை எதிர்ப்புத் திறனை வலுப்படுத்த கூடுதல் ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்திற்கு அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சுரேஷ் சாலேவின் கணினியில் மறைந்திருக்கும் ஆதாரங்கள்! கணினியை திறந்தால் முக்கிய புள்ளிகள் சிறையில்...