மட்டக்களப்பு கத்தோலிக்கத் தேவாலயத்திற்கு பிள்ளையானை அழைத்ததால் வெடித்தது பெரும் சர்ச்சை!
மட்டக்களப்பு மரியாள் இணைப் பேராலயத்தில் 2005 ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலை ஒன்றில் குற்றம்சாட்டப்பட்டு, 5 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவித்த ஒருவரை அதே மரியாள் பேராலயத்திற்கு அருட்தந்தை வரவேற்ற விடயம் தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
ஈஸ்டர் குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் வரை, இலங்கையின் வரலாற்றில் ஒரு தேவாலயத்தினுள் நடைபெற்ற மிக மோசமான படுகொலை என்று, 2005ஆம் ஆண்டில் புனித மரியாள் இணைப் பேராலயத்தில் நடைபெற்ற படுகொலையைத்தான் கூறுவார்கள்.
புனித மரியாள் இணைப் பேராலயம்
மட்டக்களப்பு நகரின் மத்தியில் உள்ள புனித மரியாள் இணைப் பேராலயத்தில் 2005ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தின நள்ளிரவு ஆராதனை நடந்துகொண்டிருந்தபோதுதான், அந்தப் படுகொலை நடைபெற்றது.
திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை முன்னிலையில் அந்தப் படுகொலை நடாத்தப்பட்டது.
பேராயரிடம் திருவிருந்து பெற்றுவிட்டுத் திரும்புகின்ற நேரத்தில் திருப்பலிப்பீடத்தில் வைத்து அந்தப் படுகொலை மேற்கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அன்றைய தினம் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.
அத்துடன் ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரியும் சுடப்பட்டார்.
கொலைதாரிகள் தப்பிச்செல்லும் போது திருப்பலியில் கலந்துகொண்டவர்களை நோக்கிச் சுட்டபடிதான் தப்பிச் சென்றார்கள்.
அதில் மரியாள் இணைப்பேராலய பாடகர் குழுவைச் சேர்ந்த ஐவர் படுகாயம் அடைந்தார்கள்.
மேலும் திருப்பலிப்பூசையில் கலந்துகொண்டிருந்த நான்கு கிறிஸ்தவர்கள் படுகாயம் அடைந்திருந்தார்கள்.
5 வருடங்கள் சிறை
2005 டிசம்பர் 25 அன்று அதிகாலை 1.20 இற்கு நடைபெற்ற அந்த அசம்பாவிதத்தில் பிள்ளையான் என்று அழைக்கப்படுகின்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் சம்பந்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தபட்டு 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
புனித மரியாள் இணைப்பேராலயத்தில் இடம்பெற்ற அந்த படுகொலையில் பிள்ளையானுக்கு இருக்கின்ற தொடர்புகள் பற்றி நேரடிச் சாட்சியம் வழங்கியவர்கள் வேறு யாரும் அல்ல. அவருடன் கூட இருந்தவர்கள், அவரது உதவியாளர்கள்தான்.
அவர்களது சாட்சியங்களின் அடிப்படையில்தான் பிள்ளையான் கைதுசெய்யப்பட்டார்.
அப்படியிருக்க, எந்த மரியாள் இணைப்பேராலயத்தை பிள்ளையான் இரத்தத்தில் நனைத்தாரோ அதே பேராலயத்திற்கு பிள்ளையானை அழைத்து அவருக்கு மாவமன்னிப்பு வழங்கிய பங்குத் தந்தையின் செயல் அங்குள்ள கத்தோலிக்கர்களால் மிகுந்த கண்டனத்துக்கு உள்ளாகி வருகின்றது.
ஜனாதிபதி தேர்தல்
‘நடைபெற இருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் பிள்ளையானின் பேரம்பேசும் சக்தியை அதிகரிப்பதற்காகவே இதுபோன்ற நிகழ்ச்சிகள் திட்டமிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டதாகக்’ கூறுகின்றார் மட்டக்களப்பில் உள்ள ஒரு இளம் துறவி.
‘பிள்ளையானுக்கு மட்டக்களப்பில் கிறிஸ்தவர்களின் ஆதரவும் இருக்கின்றது என்பதைக் காண்பித்து, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் பேரம்பேசும் நோக்குடன் மேற்கொள்ளப்படுகின்ற சதிக்கு சிலர் துணைபோய்விட்டதாகவும்’ அந்தத்துறவி கவலை வெளியிட்டார்.
பிள்ளையானுக்கு புனித மரியாள் இணைப் பேராலயத்தில் வரவேற்று வழங்கப்பட்டது பற்றி கருத்துவெளியிட்ட அந்த பங்கைச் சேர்ந்த ஒருவர், ‘பிள்ளையானை எதற்காக அழைத்தீர்கள் என்று நாங்கள் கேள்வி எழுப்பியதற்கு, பேராலய முன்றலுக்கு மண் போடுவதற்காகவென்று பதில் வழங்கப்பட்டது.
பேராலய முன்றல் என்று இவர்கள் கூறுவது வெறும் 100 சதுர மீற்றர் பகுதி மாத்திரம்தான். அங்கு உண்மையிலேயே மண் போடவேண்டிய தேவையே இல்லை. ஒருவேளை பிரச்சனை இருந்தால் கூட, பங்கைச் சேர்ந்த ஒவ்வொருவரும் ஒரு பிடி மண் அள்ளிப் போட்டால் கூட பிரச்சனை தீர்ந்துவிடும்.
பிள்ளையான் போன்ற கொலைக்குற்றம்சாட்டப்பட்டவரை அவர் கொலை செய்த கோவிலுக்கே அழைத்துவந்த பாவ மன்னிப்பு வழங்கிய எமது பங்குத் தந்தையின் செயலை கடவுள் கூட மன்னிக்கமாட்டார்’ என்று தெரிவித்தார்.