ஜேர்மனியில் தொடரும் முடக்க நிலை! புதிய நடைமுறைகளை அறிவித்தார் அதிபர்
ஜேர்மனியில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை இம்மாதம் 28ஆம் திகதி வரை நீடிக்கும் என அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் அறிவித்துள்ளார்.
இந்த முடக்க நிலை நீடிக்கும் காலப்பகுதியில் எவ்வாறான சட்டத்திட்டங்களை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பது தொடர்பிலும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அந்தவகையில், நாளையதினத்தில்(8) இருந்து ஒரு குடும்பத்தினர் மற்றுமொரு குடும்பத்தினரை சந்திக்க முடியும். ஆனால் ஐந்து பெரியவர்களுக்கு மேல் இருக்கக்கூடாது.
ஒரு நகரில் 7 நாட்களில் 35இற்கும் குறைவான கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால் அந்த இடத்தில் ஒரு குடும்பம் இரண்டு குடும்பத்தினரை சந்திக்க முடியும்.
அதில் பத்து பெரியவர்கள் மாத்திரமே இருக்க முடியும். 14 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த எண்ணிக்கைக்குள் உட்படுத்தப்படவில்லை.
பாடசாலைகள் மற்றும் முடி திருத்தும் நிலையங்கள் என்பன ஏற்கனவே திறக்கப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக பூக்கடைகள் மற்றும் தோட்ட பராமரிப்புக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்யும் கடைகள் மற்றும் புத்தகக் கடைகள் என்பன திறக்கப்படும்.
ஒரு இலட்சம் பேர் வசிக்கும் பகுதியில் 7 நாட்களில் 100இற்கும் குறைவான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தால் அந்த பகுதிகளில் ஆடைகள் கொள்வனவு செய்யும் கடைகள், அருங்காட்சியகங்கள், மிருகக்காட்சி சாலைகள், தாவரவியல் பூங்காக்கள் போன்றவற்றிற்கு முன்பதிவு செய்த பின்னர் செல்ல முடியும்.
நாளை(8) முதல் அடுத்து வருகின்ற 14 நாட்களுக்குள் மாநில அடிப்படையில் நாடு தழுவிய ரீதியில் 50இற்கும் குறைவான புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தால் வெளியில் இருந்து சாப்பிடுகின்ற கடைகள், திரையரங்குகள், நாடகக்கூடங்கள், இசை நிகழ்வுகள் நடத்தும் இடங்கள் என்பன பலர் ஒன்றுகூடும் இடங்கள் திறக்கப்படும் என அந்நாட்டின் அதிபர் ஏஞ்சலோ மெர்க்கல் அறிவித்திருக்கின்றார்.