கடல் அட்டை பண்ணைக்கு எதிராக தொடர் போராட்டம்(Video)
கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சி பூநகரி பிரதேச கடற்தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்திற்குட்பட்ட இலவன்குடா கிராஞ்சி பிரதேசத்தை சேர்ந்த கடற்தொழில் சமூகங்கள், கடற்தொழிலை முன்னெடுப்பதில் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குவதாக தெரிவித்து கடந்த 14 நாட்களாக தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கடல் அட்டை
குறித்த பிரதேசத்தில் கடந்த பல நாட்களாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகள் காரணமாக சிறு மீன்பிடி கரையோர தொழிலாளர்களாகிய தமது பாரம்பரிய கடற்தொழிலை முன்னெடுப்பதில் பல்வேறு தடைகள் ஏற்பட்டுள்ளதாக கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் இது குறித்து பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் அல்லது திணைக்களங்கள் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட கடற்தொழிலாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த பிரச்சினை தொடர்பாக கிராஞ்சி இலவங்குடா போராட்டம் தொடர்பாக பாதிக்கப்பட்ட கிராமத்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
கடல் அட்டை பண்ணை அமைப்பதனால் பெண்தலைமத்துவ குடும்பம் பாதிக்கப்படுவதாகவும் இன்று மனித உரிமை ஆணைக்குழுக்கு வருகை தந்ததாகவும் வெகுவிரைவில் நீதி கிடைக்க வேண்டும் எனவும் கிராஞ்சி இலவங்குடா கடற்தொழிலாளர் பத்திநாதர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மக்களின் வேண்டுகோள்
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“4.10.2022 மனிதஉரிமை ஆணைக்குழுவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணை அமைப்பதற்கு எதிராக முறைப்பாடுகள் பதிவு செய்து இருந்தமைக்கு அமைவாக விசாரணைக்கு இன்று வருகை தந்திருந்தோம்.
இவ் விசாரணையில் நீரியல் வளத்துறை அதிகாரி வருகை தந்திருந்ததுடன் அட்டை பண்ணை அமைப்பதற்கு எந்தவித சிபாரிசும் வழங்கவில்லை என திட்டவட்டமாக கூறி இருந்தார்.
எங்களுடைய போராட்டத்திற்கு எந்த அதிகாரிகளும் எவ்விதமான நடவடிக்கைகளையும் எவ்வித தீர்வையும் பெற்று தரவில்லை.”என தெரிவித்துள்ளார்.
மேலதிக செய்தி-தீபன்