சீரற்ற காலநிலையால் தொடரும் பாதிப்புக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியான மழை காரணமாக 1104 குடும்பங்களைச் சேர்ந்த 3374 பேர் பாதிப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் தொடர் மழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் குளங்களின் நீர்மட்டம் அதிகரித்து வான் பாயத் தொடங்கியுள்ளதுடன், இதனால் தாழ் நிலப்பகுதிகளிலும வெள்ள நீர் தேங்கியுள்ளது.
மேலும் முல்லைத்தீவில் என்றுமில்லாதவாறு காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசெயலகப்பிரிவிற்குட்பட்ட, கருவேலங்கண்டல் இடைத்தங்கல் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலமைகள் குறித்து வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சந்திரரூபன் ஆகியோர் ஆராய்ந்தனர்.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடரும் சீரற்ற காலநிலையால் வட்டக்கச்சி பெரியகுளம் பகுதிகளில் வீதிகளை மூடி வெள்ளம் பாய்வதால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம்
யாழ்.வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கற்கோவளம் பகுதியிலும் பலர் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததுள்ளதுடன் கிராமமே வெள்ளக்காடாக காட்சியளித்துள்ளது.
வவுனியா
வவுனியா, நொச்சிமோட்டைப் பகுதியில் வெள்ள நீர் வீதியை மேவி பாய்வதால் ஏ9 ஊடான போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது.
குறித்த பகுதியில் சிறிய ரக வாகனங்கள் பல பயணிக்க முடியாத நிலையில் இரவில் இருந்து நீண்ட வரிசையில் காணப்படுகிறது.
நிந்தவூர்
கல்முனைக்கும் அக்கரைப்பற்றுக்கும் இடையிலான ஓலுவில் களியோடை பாலத்திற்கு அடுத்ததாக நிந்தவூர் பகுதியிலுள்ள பாலம் வெள்ளத்தினால் உடைந்து வீழ்ந்ததால் அதனூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா
மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
நேற்று வரை இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது.
மேலும், நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழையுடன் தாழ்நிலைப் பிரதேசங்களில் அண்டி வாழும் மக்கள் வெள்ள நீரில் மூழ்கியதால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை 14 ஆயிரத்து 237 குடும்பங்களைச் சேர்ந்த 49 ஆயிரத்து 560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 2100 நபர்கள் வரை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |