தமிழ் தேசிய அரசியலமைப்பை இந்தியாவிடமிருந்து பிரிப்பதற்கு தொடரும் முயற்சிகள்: இ.கதிர்
புதிய ஜனாதிபதி தெரிவில் இந்தியா தலையிடுவது என்பது தமிழ் தேசிய அரசியலை இந்தியாவிடமிருந்து அந்நியப்படுத்தும் நடவடிக்கையாகும் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலைமை தொடர்பில் அவர் இன்று(28) வெளியிட்டுள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலை
இது தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இந்த நாடு தற்போது பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவை சந்தித்திருக்கின்ற நிலையில் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மக்கள் பாரிய போராட்டமொன்றை மேற்கொண்டு அதனூடாக ஆட்சி மாற்றம் இடம்பெற்று தற்போது நாடாளுமன்றத்தினூடாக புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தென்னிலங்கை போராட்டமென்பது நாட்டின் பொருளாதார நிலைமையை பின்னடைய செய்த அரசியல் தலைவர்களை விரட்டியடிக்கும் முகமான மக்கள் போராட்டமாக இருந்தாலும் அதன் பின்னணியில் இரண்டு அரசியற்கட்சிகளின் செயற்பாடுகள் இருப்பதென்பது அரசியல் ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தி கூறக்கூடிய ஒரு விடயம்.
அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்கைகளினால் நாடு பின்னடவை சந்தித்ததன் காரணமாக மக்கள் கொண்ட வெறுப்புணர்வை சாதகமாக பயன்படுத்தி அரசியல் போராட்டமொன்றை இவ்விரு கட்சிகளும் மேற்கொள்வதாகவே பலரும் கருதுகின்றனர்.
இதற்கு அனுசரணையாக எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இருப்பதென்பதும் ஒரு கருத்தாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இந்தப் போராட்டம் யார் செய்கின்றார்கள் எதற்கு செய்கின்றார்கள் என்பதற்கு அப்பால் தமிழ் மக்களை பொறுத்தவரையில் இந்த போராட்டதின் மூலமாக நாம் அடையப் போவது என்ன? எமது மக்கள் அனுபவித்த வலி வேதனைகளுடன் ஒப்பிடுகையில் தூசியளவிற்கும் பெறுமதியில்லாத போராட்டமாகவே இது இருக்கின்றது.
தென்னிலங்கையில் எவர் ஆட்சி இடம்பெற்றாலும் எமது உரிமைகள் தொடர்பான பிரசச்சனைகளை அங்கீகரிக்க போவதுமில்லை. அதற்கு மதிப்பளிக்க போவதுமில்லை என்பது வரலாறு எமக்கு கற்று தந்த பாடம்.
எமது உரிமைகள் தொடர்பில் நீண்டகாலமாக யுத்தம் செய்த ஒரு இனம், எமது இனம் அழிக்கப்படுகின்ற போது தென்னிலங்கையில் ஆட்சியாளர்களுடன் ஒன்றிணைந்து இருந்தவர்களும், எமது இனத்தை படுகொலை செய்தவர்களின் வழிவந்தவர்களும், தமிழினம் அழிக்கப்படுகின்ற போது வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்களுமே இந்த போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள்.
தமிழர்களின் உரிமை போராட்டமென்பது மிகவும் அர்ப்பணிப்பானது, புனிதமானது. அது ஒரு தியாகம். இதனை முதலில் எமது தமிழ் அரசியற் தலைவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
எமது தியாகத்தை இன்றைய தென்னிலங்கை போராட்டத்துடன் ஒப்பிடவே முடியாது. இன்று தங்களது சந்தர்ப்பவாத அரசியற்செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக எமது புனிதமான போராட்டத்தை அதனுடன் ஒப்பிட வேண்டாம்.
அவ்வாறான ஒப்பிடும் செயற்பாடுகளுக்கு எமது அரசியற் தலைவர்கள் அங்கு சென்று முன் நிற்பதுதான் மிகவும் மனவேதனையான விடயம்.
இதனை எமது மக்கள் தெளிவாகபுரிந்து கொள்ளவேண்டும். இன்றைய நிலையில் தமிழர்களை வன்முறைகளுக்குள் இழுத்து செல்ல வேண்டாம்.
நாங்கள் வன்முறையாளர்களோ, கிளர்ச்சியாளர்களோ, பயங்கரவாதிகளோ இல்லை. நாங்கள் ஒரு தேசிய இனத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகள்.
எமது இனரீதியான விடயங்களை சாதாரண பொருளாதார பிரச்சனைகளுக்கு பயன்படுத்துவது முற்றலும் தவறானதொரு விடயம். அந்த வகையில் கடந்த 20ம் திகதி நாடாளுமன்றத்தில் புதிய ஜனாதிபதி தெரிவின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பு பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் டளஸ் அழகப்பெரும அவர்களை ஆதரிக்க தீர்மானித்திருந்தார்கள்.
இந்தியாவின் அழுத்தம் காரணமாக அந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று சமூக வலைதளங்கள் வாயிலாக அறிய கிடைத்தது.
தற்போது ராஜபக்சர்களின் கை பொம்மையாக இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்காகவே அம்முடிவை எடுத்தாகவும், ராஜபக்ச குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றப்படுவது தமிழ் மக்களின் விருப்பமாக இருப்பதால் நாங்கள் அந்தத் தீர்மானத்தை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான கருத்துக்கள் தமிழ் தேசிய கூட்மைப்பில் அங்கம் வகிக்கும் ஒருசிலரின் சந்தர்ப்பவாத அரசியலை நியாயப்படுத்தும் முகமாக வெளிப்படும் கருத்துகளாகும்.
தனித்துவமான முடிவை தீர்மானிக்க கூடிய பலம் இவர்களிடம் இல்லாமல் போய்விட்டது. உரிமை சார்ந்த விடயங்களில் நாங்கள் தனித்துவமாக முடிவுகளை எடுக்க வேண்டும்.
இந்தியா, அமெரிக்காவின் அழுத்தத்திற்கு நாங்கள் முடிவெடுக்க முடியாது. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் ஆதரவு எங்களுக்கு தேவை. நாங்கள் உலக நாடுகள் எவற்றையும் பகைக்க விரும்பவில்லை.
ஆனால், எங்களுக்கு இதுதான் விடயம் என்பதை அவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர்கள் சொல்லுகின்றார்கள் என்பதற்காக நாங்கள் ஒரு முடிவை எடுக்க முடியாது.
எமது மக்கள் தொடர்பில் தனித்துவமான முடிவெடுக்கக் கூடிய தரப்பாக இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு இல்லாமல் போய்விட்டது. எனவே தமது நிலைமை தெடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் எடுக்கும் முடிவுகளை மக்கள் மத்தியில் நியாயபடுத்துவதற்காக தேவையற்ற விடயங்களை முன்வைக்க வேண்டாம். முக்கியமாக இந்த விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான திருவாளர் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் அவர்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றோம்.
இராஜதந்திர செயற்பாடு
எதிர்காலத்தில் எமது மக்களின் தேசிய இருப்பை அழிப்பதற்கு நீங்கள் திட்டமிட்டு செயற்படுவது போன்றே உங்கள் செயற்பாடுகள் இருக்கின்றது.
இந்த விடயத்தில் இந்தியாவை கொண்டு வந்தததென்பது தமிழ் தேசிய அரசியற் பரப்பிலே ஈழத்தமிழ் மக்களுக்கும் இந்தியாவிற்கும் இருக்கும் உறவில் விரிசல்களை ஏற்படுத்துவதும், தமிழ் தேசிய அரசியலை இந்தியாவிடமிருந்து அந்நியப்படுத்துவதும், எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியலை முற்றுமுழுதாக அழிப்பதற்குமான ஒரு இராஜதந்திர நடவடிக்கை போன்றே நாங்கள் புரிந்து கொள்கின்றோம்.
இதனை ஒரு பாரதூரமான குற்றச்சாட்டாக முன்வைக்கின்றோம். தென்னிலங்கை ஆட்சியாளர்களை காலத்திற்கு காலம் மாற்றி நியாயப்படுத்துவதும், உங்களது அரசியலை தக்க வைப்பதுமே உங்கள் வேலையாக இருக்கின்றது.
தமிழ் மக்களின் நிலைப்பாடுகள் தொடர்பில் நல்லாட்சி காலத்திலும் சரி, தற்போதும் சரி நீங்கள் சரியாக தீர்மானிக்கவில்லை. இன்று இத்தனை பிரச்சனைகள் இடம்பெற்றும் தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் எவ்வாறான நிலைப்பாடுகளையும் முன்வைக்காமல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பில் கதைத்து கொண்டிருக்கின்றீர்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவரும், பங்காளி கட்சிகளின் தலைவர்களும் தீர்க்கமான முடிவுகளை கையாள வேண்டும்.
தொடர்ந்தும் ஒரு ஆளுமையற்ற தலைவர்களாக இருக்க வேண்டாம் என்பதையும் இங்கு தெரிவித்து கொள்கின்றோம்” என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வகட்சியினூடாக தெற்கு மக்கள் எதிர்பார்க்கும் விடயம்: கோவிந்தன் கருணாகரம்(Photos) |