சர்வகட்சியினூடாக தெற்கு மக்கள் எதிர்பார்க்கும் விடயம்: கோவிந்தன் கருணாகரம்(Video)
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் உள்ள மூன்று கட்சிகளையும் உடைத்து சிதறடிக்கும் வேலைத்திட்டங்களை சிலர் வெளியிலிருந்தும் உள்ளிருந்தும் முன்னெடுத்துவருவதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் நிகழ்வு நேற்று(27) நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நினைவுதினம் அனுஷ்டிப்பு
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ இலங்கை சுதந்திரமடைந்த காலமிருந்து தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் பல கட்டங்களாக நடைபெற்றாலும் 1983ஆம் ஆண்டு ஜுலையில் நடாத்தப்பட்ட இனக்கலவரம் தமிழின சுத்திகரிப்பாகவே பார்க்கப்பட்டது.
கறுப்பு ஜுலையென்று உலகளாவிய ரீதியில் பேசப்பட்ட அந்த நாட்கள் ஜுலை 23ஆம் திகதி அனுஸ்டிப்பது பிழையான விடயமாகும்.
1983ஆம் ஆண்டு ஜுலை 23ஆம் திகதி திருநெல்வேலியில் விடுதலைப்புலிகளினால் 13 இராணுவத்தினர்தான் கொல்லப்பட்டார்கள்.
இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பினை சென்றடைந்த நிலையிலேயே ஏற்கனவே திட்டமிட்டிருந்த இன சுத்திகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஜுலை 25ஆம் திகதியும் 27ஆம் திகதியும் தமிழ் அரசியல் கைதிகள் வெலிக்கடை சிறைக்குள்ளே இலங்கை இராணுவத்தின் அனுசரணையுடன் சிலர் சிறைச்சாலைக்குள் அனுப்பப்பட்டு 25ஆம் திகதி 36அரசியல் கைதிகளும் 27ஆம் திகதி 17 அரசியல் கைதிகள் உட்பட 53பேர் வெலிக்கடைக்குள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
மே மாதமும், ஜுலை மாதமும் தமிழர்களின் வாழ்நாளில் மறக்கமுடியாத நாளாகயிருந்தது. இந்த இரு மாதங்களும் தமிழர்களை கொடுமைப்படுத்திய சிங்கள அரசதலைவர்களுக்கு தற்போது மறமுடியாத நாளாக அமைந்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்படும் அரசாங்கங்களுக்கு தற்போது என்ன நடைபெற்றுவருகின்றது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த நாட்டு மக்களினால் விரட்டியடிக்கப்பட்டு எந்த நாட்டிலும் தங்கமுடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ச இந்த நாட்டில் பத்து வருடத்திற்கு மேலாக இந்த நாட்டில் ஜனாதிபதியாகயிருந்து இன்று அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார்.
மே மாதம் முள்ளிவாய்க்காலில் ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களையும் ஆயிரக்கணக்கான போராளிகளையும் கொன்றுகுவித்த கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு எதிராக ஏப்ரல் மாதம் போராட்டங்கள் தொடங்கியது.
மே மாதம் 09ஆம் திகதி பிரதமர் பதிவியிலிருந்து மகிந்தராஜபக்ச விலகவேண்டிய சூழ்நிலையேற்பட்டது. ஜுலை மாதத்தில் இந்த நாட்டில் ஸ்திரமற்ற தன்மையேற்பட்டது.
ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரமதர் வாசஸ்தலம் என்பன போராட்டக்காரர்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நாடு அல்லோல கல்லோலப்பட்டு நிற்கின்றது.
தமிழர்கள் தமது நியாயமான உரிமைகளுக்காகவே அகிம்சை ரீதியாகவும், ஆயுத ரீதியாகவும் கடந்த காலத்தில் போராடியுள்ளார்கள் என்பதை இன்றைய அரசாங்கம் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு நாடாளுமன்ற உறுப்புரிமையுடன் வந்த ரணில் விக்ரமசிங்க இன்று ஜனாதிபதியாகியுள்ளார்.
இன்று சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்காக அறை கூவல் விடுத்துள்ளார். 2015- தொடக்கம் 2019 வரையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஆட்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது.
இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்திருந்தது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பல உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்தாக கதைகள் கூறப்படுகின்றன.
ஆனால் தற்போது வரை தமிழ் தேசிய கூட்டமைப்பு யாராலும் சிதைக்கப்படமுடியாமலும். உடைக்கமுடியாமலுமே நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றது.
ஜனாதிபதி தெரிவு தொடர்பில் ஒன்றுபட்ட நிலையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடளுமன்ற உறுப்பினர்கள் பத்துபேரும் செயற்பட்டுள்ளனர்.
இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியானது சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல தமிழ் மக்களுக்கும் ஒரு பாதிப்பனை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் மக்களுக்கு பல பிரச்சினைகள் உள்ளது.தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வுத்திட்டம் வேண்டும். அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையொன்று ஏற்படவேண்டும் என்பது அனைவரது அபிலாஷையாகும்.
அந்தவகையில் சர்வகட்சி ஆட்சியமைப்பதற்கான அழைப்பினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு அதில் பங்கெடுக்கும் என்று நான் கருதவில்லை. சர்வகட்சி ஆட்சியொன்று அமையவேண்டும், எமது இன பிரச்சினைக்கான தீர்வு ஒன்று இந்த சர்வகட்சி ஊடாக ஏற்படவேண்டும்.
1957ஆம் ஆண்டு பண்டா - செல்வா ஒப்பந்தம் உருவாகும்போது புத்தி பிக்குகளுடன் இணைந்து ஜே.ஆர்.ஜயவர்த்தன புத்த பிக்குகளுடன் இணைந்து கண்டியாத்திரை சென்று எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தனது அரசியல் எதிர்காலத்தினை கருத்திற்கொண்டு பண்டாரநாயக்க அந்த ஒப்பந்தத்தினை அமுல்படுத்த தவறியிருந்தார்.
2000 ஆம் ஆண்டு சந்திரிகாவினால் தீர்வுத்திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டபோது ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றத்திற்குள் அது எரிக்கப்பட்டது. இதுபோன்று பல ஒப்பந்தங்கள் எறிக்கப்பட்டது.
தமிழர்களின் எதிர்பார்ப்பு
இன பிரச்சினைக்கான தீர்வொன்று கிடைக்கவேண்டுமாகயிருந்தால் எந்தவிதமான எதிர்ப்புகளும் தெற்கு அரசியல் கட்சிகளிடையே இருக்ககூடாது.
இந்த ஆட்சி நிலைத்திருக்குமானால் எதிர்வரும் காலத்தில் சர்வகட்சி ஆட்சியொன்று உருவாகுமாகயிருந்தால் சர்வகட்சிகள் இணைந்து பொருளாதார மீட்புக்கு மேலாக இன பிரச்சினைக்கான தீர்வினை தருவார்களென்று எதிர்பார்க்கின்றோம்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் 22வது திருத்த சட்டத்தில் இன பிரச்சினையும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். தமிழ் மக்களும் இதனையே எதிர்பார்க்கின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனை தென்னெருவில்பற்று பிரதேசசபையின் தவிசாளர் யோகநாதன் மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மீதான சர்வதேச நெருக்கடிக்கு இதுவே காரணம்! விரைவாக முடிவெடுங்கள் - சார்ல்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை (VIDEO) |