ராஜகிரிய, மதின்னாகொடவில் பழைய பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணி ஆரம்பம்
இராஜகிரிய - மதின்னாகொடவில் பழைய பாலத்திற்குப் பதிலாக புதிய பாலம் அமைக்கும் பணியை அமைச்சர் ஜோன்ஸ்டன் தொடங்கி வைத்துள்ளார்.
இராஜகிரிய - மதின்னாகொட வீதியில் கொலன்னாவ கால்வாயின் குறுக்கே அமைக்கப்பட்ட பழைய மதின்னாகொட பாலத்திற்குப் பதிலாக 43 மில்லியன் ரூபா செலவில் 80 மீற்றர் நீளமான இருவழிப்பாதை நிர்மாணிக்கும் பணி ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) தலைமையில் இன்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர(Sarath Weerasekara) மற்றும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே ஆகியோரும் கலந்துகொண்டனர்.
பழுதடைந்துள்ள இந்த பாலம் கொலன்னாவ மற்றும் கோட்டே தேர்தல் தொகுதிகளை இணைக்கிறது. ஒரு வழிப்பாதையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பாலத்தை நாளாந்தம் சுமார் 15,000 வாகனங்கள் பயன்படுத்துகின்றன.
இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த நெரிசல் காரணமாக ராஜகிரிய வழியாகக் கொழும்புக்கு வரும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
இந்த நிர்மாணப் பணிகள் உள்ளூர்
நிதியில் நிர்மாணிக்கப்படுவதோடு இதற்கான ஒப்பந்த காலம் 18 மாதங்கள் ஆகும்.
எனினும் இந்த ஒப்பந்தத்தை 12 மாதங்களாகக் குறைக்குமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன்
பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.




