போதைப்பொருள் ஜாம்பவான்களுக்காக கோடிகளை வாரியிறைத்த முன்னாள் ஆட்சியாளர்கள்.. அரசின் கடும் எச்சரிக்கை
குற்ற இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதற்காகக் கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் தற்போது அம்பலமாகத் தொடங்கியுள்ளன என்றும், இவை தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பாதாள உலகக் குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் பலகோடி ரூபா இலஞ்சம் பெற்றுள்ளனர் என கூறப்படும் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னாள் ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் ஒரு குற்ற இராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதற்காகவே முன்னாள் ஆட்சியாளர்கள் பல்வேறு சூழ்ச்சிகளைச் செய்துள்ளனர்.
ஆபத்தான போதைப்பொருள் குற்றவாளிகளைச் சட்டத்தின் பிடியிலிருந்து விடுவிப்பதற்காக இவர்கள் பலகோடி ரூபா இலஞ்சம் வாங்கியுள்ளனர். இதுதான் அவர்கள் கடந்த காலத்தில் கட்டியெழுப்பிய சீரழிந்த அரசியல் கலாசாரமாகும்.

கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த இத்தகைய சூழ்ச்சிகள் இப்போது ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இவற்றை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மூடிமறைப்பதற்கு இந்த அரசு ஒருபோதும் இடமளிக்காது.
அம்பலமாகியுள்ள அனைத்துச் சம்பவங்கள் தொடர்பிலும் பாரபட்சமின்றி முழுமையான விசாரணைகள் நடத்தப்பட்டு, நாட்டில் சட்டத்தின் ஆட்சி மிகச்சரியாக நிலைநாட்டப்படும்.
இந்த அநீதிகளுக்கு எதிராகச் செயற்படுவதற்காகவே நாட்டு மக்கள் எமக்குத் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
கொளுத்தும் வெயில்... பச்சிளம் குழந்தைகளைக் காப்பாற்ற பிரித்தானியப் பெற்றோர்கள் எடுத்த முடிவு News Lankasri